இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக போர் விமானம் ஒன்று இன்று (09-07-25) ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக வானில் பயணம் மேற்கொண்டிருந்தது. சுரு மாவட்டம், பனுடா கிராமத்தில் பறந்து கொண்டிருந்த போது அங்குள்ள விவசாய நிலத்தில் தீடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால், வானத்தில் இருந்து ஒரு பெரிய சத்தமும், தீயும் கிளம்பியுள்ளது. இந்த விபத்து காரணமாக, அருகில் உள்ள வயல்களிலும் தீ பரவியுள்ளது. இதனை கண்ட கிராம மக்கள், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து ராணுவ மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில், ராணுவ மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், விமானத்தின் இடிபாடுகளில் இருந்து விமானியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும், மற்றொரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரட்டை இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் பயணித்த விமானி, இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விமானியை தவிர உயிரிழந்த மற்றொரு நபரின் அடையாளங்கள் இதுவரை தெரியப்படுத்தவில்லை. இந்த விபத்திற்கான காரணம் குறித்து ராணுவ மீட்புக் குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஐந்து மாதங்களில் இது மூன்றாவது ஜாகுவார் விமான விபத்து ஆகும். மார்ச் 7 ஆம் தேதி, அம்பாலாவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளானது. ஏப்ரல் 2 ஆம் தேதி, குஜராத்தில் உள்ள ஜாம்நகர் அருகே மற்றொரு ஜாகுவார் இரட்டை இருக்கைகள் கொண்ட பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த இரண்டு விமானிகளில் ஒருவர் இறந்தார், மற்றவர் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.