ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் அடுத்த சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் சேட்டு (வயது 32). திருமணமாகாத இவர், மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (25.08.2025) மதுபோதையில் இருந்த அவர், வீட்டில் தனது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார். அவரது தாயார் லட்சுமி அளித்த புகாரின் பேரில், வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதே போன்று ஈரோடு பெரியசேமூரைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 46). தறிபட்டறை தொழிலாளியான அவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் சரிவர வேலைக்கு போகாமல், கடன் வாங்கி மது அருந்தி வந்துள்ளார்.
இது தொடர்பாக அவரது உறவினர்கள் அறிவுரை கூறியும், மகேந்திரன் கேட்கவில்லை. இந்நிலையில், கடந்த 20ம் தேதி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட உறவினர்கள், ஈரோடு அரசு தலைமை மருத்தவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மகேந்திரன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சசிகலா அளித்த புகாரின் பேரில், ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதே சமயம் பவானிசாகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராஜேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகன் கேத்தீஸ்வரன் அளித்த புகாரின் பேரில், பவானிசாகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.