நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை மறுநாள் (27.08.2025) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ஏராளமான மக்கள், தங்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய உள்ளனர். இதனையடுத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் வைத்து கரைப்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதற்கான விழா ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர்குப்பம் பகுதியில் விநாயகர் கோவில் முன்பு பந்தல் அமைக்கும் பணியில் இன்று (25.08.2025) 4 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பந்தலின் இரும்பு பைப்பானது அப்பகுதியில் மேலே சென்றுகொண்டிருந்த மின்சார வயர் மீது எதிர்பாராத விதமாகப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி பரத் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் உடனிருந்த ரஜினி மற்றும் தென்னவன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து இவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அதே சமயம் மற்றொரு புறம் மாதாவரம் பகுதியில் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரசாந்த் (வயது 22) என்ற இளைஞர் உயரழுத்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலை வைக்கப் பந்தல் அமைத்த போது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.