புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் சரகம் ஒத்தக்கடை கடைவீதியில் சில நாட்களுக்கு முன்பு 6 இளைஞர்கள் போதையில் ரகளை செய்து கடைகளில் உள்ள பதாகைகள், கட்டில் உள்ளிட்ட பொருட்களை உடைத்து நாசம் செய்துள்ளனர். இந்த சம்வத்தை, அங்கிருந்த ஒரு இளைஞர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டது வைரலாக பரவியது. வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் தேடுவதை அறிந்து தலைமறைவாகினர்.
இதனையடுத்து மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் அறந்தாங்கி போலிசார் போதையில் ரகளை செய்த இளைஞர்களை அடையாளம் கண்டுபிடித்தனர். அதில், சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அடைக்கல சேவியர், கங்ஸ்லின் (கல்லூரி மாணவர்), சஞ்சய், குரும்பூர் அண்ணாநகரைச் சேர்ந்த குட்டி (எ)சௌந்தர்ராஜன், மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன், பாலசுப்பிரமணியன் ஆகிய 6 பேர்தான் இந்த சம்வத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
6 பேர் மீதும் பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் ரகளை செய்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் கிங்ஸ்லின், அடைக்கலராஜா ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். கைதானவர்கள் கூறும் போது, ‘எங்கள் நண்பன் மாங்குடி அருண்பாண்டியனின் பிறந்த நாளை கொண்டாட கேக் வெட்டிய பிறகு இப்படி நடந்தது. இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை நாங்கள் வீடியோ எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்தோம் அது வெளியிலும் பரவிவிட்டது. போதையில் நடந்தது’ என்று கூறியுள்ளனர். 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.