புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் கஞ்சா போன்ற மாற்றுப் போதையால் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு சில வாரங்களில் இளைஞர்கள் ரகளை, மாடு தேடிச் சென்ற பெண் கொலை, அதே போல மாடு ஓட்டி வரச் சென்ற இளம்பெண் மீது தாக்குதல் என்று மாற்றுப் போதையால் நடந்த சமூகவிரோத செயல்களை பட்டியலிட்டு கூறுகின்றனர்.
இந்நிலையில் தான் இதே அறந்தாங்கி காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் கடந்த புதன் கிழமை காலை அந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 4 ம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளிக்கு வரும்போது பள்ளியில் இருந்து 100 மீ தூரத்தில் முகத்தை மறைத்து நின்ற சிலர் அந்த சிறுமியை பைக்கில் கடத்திச் செல்ல முயன்ற போது அவர்களிடம் இருந்து பறிபட்டு பள்ளிக்குள் ஓடிவிட்டார். அவர்களிடம் கத்தி போன்ற ஆயுதங்களும் இருந்ததை மாணவி பார்த்து பள்ளி ஆசிரியர்களிடம் கூறியுள்ளார்.
தகவலறிந்து மாணவியின் பெற்றோர் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர், கிராமத்தினர் கூடிவிட்டனர். இந்த தகவலறிந்து வந்த அறந்தாங்கி போலீஸ் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு செல்வராஜ் மகன் முருகானந்தம் வீட்டிற்கு தேடிச் சென்றபோது அங்கே 2 திருட்டு பைக்குகள் கிடந்ததை கைப்பற்றினர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருநாளூர் தெற்கு கருவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மகன் சிவா (28), அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பரத், பேராவூரணி தாலுகா ஊமத்தநாடு ஆலடிக்காடு பெரியய்யா மகன் மாரிமுத்து (35) ஆகியோரை கைது செய்து திருட்டுப் பைக்குகளையும் மீட்டு வந்து விசாரித்த போது சிறுமியை கடத்த முயன்றவர்கள் தப்பிச் சென்றுவிட்டதாக கூறியவர்கள் நாங்கள் கீரமங்கலம், வடகாடு பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகளில் மோட்டார் கேபிள்கள், பைக்குகள் திருடி விற்றதாகவும் கூறியுள்ளனர்.
தொடர்ந்து சிறுமியை கடத்த முயன்றவர்களை கைது செய்யும் வரை மற்ற மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று பெற்றோர்கள் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடிய நிலையில் தப்பிச் சென்றவர்களின் செல்போன்கள் சிட்டங்காடு பகுதியோடு அணைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. நீண்ட தொடர் தேடலுக்கு பிறகு சிறுமியை கடத்த முயன்று தப்பிச் சென்ற திருநாளூர் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் வீட்டில் வளர்த்துவந்த பாண்டி (19) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்த பிறகே இன்று வெள்ளிக்கிழமை மதியத்திற்கு பிறகே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினர்.
சிறுமி கடத்தல் முயற்சி வழக்கில் கைது செய்யப்பட் சிறுவன் உள்ட இருவரையும் அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். மேலும், இவர்களுக்கெல்லாம் தலைவனாக இருந்து கஞ்சா விற்பனை, திருட்டு சம்பவங்களுக்காக இளைஞர்கள், சிறுவர்களை பயன்படுத்தி வந்த திருநாளூர் கொப்பியான் குடியிருப்பு செல்வராஜ் மகன் முருகானந்தம் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து அக்கிராமத்தினர் கூறும் போது, 'முருகானந்தம் அவனது சகோதரன் ஐயப்பன் ஆகியோர் பல மாணவர்களை கஞ்சாவுக்கு அடிமையாக்கி சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பள்ளிகளை குறிவைத்து மாணவர்களுக்கு கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தி வந்துள்ளார்கள். மேலும், விலை உயர்ந்த பைக்குகள், விவசாய ஆழ்குழாய் கிணறுகளில் கேபிள் திருட்டு, உண்டியல் திருட்டு ஆகியவற்றிற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட சிறுவர்களை பயன்படுத்தியுள்ளனர். இதனால் அந்த சிறுவர்களும் மாற்றுப் போதைக்கு அடிமையாகி பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் பலர் பல சிறைகளில் இருந்து வெளியே வந்துள்ளனர். கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்ட போலீசார் பைக் திருட்டு வழக்கில் சிலரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். தற்போது முருகானந்தம் சகோதரன் ஐயப்பன் வாகன விபத்தில் இறந்துவிட்டான். தற்போது போக்சோவில் கைதாகி உள்ள சிறுவனும் பள்ளி படிப்பை சில ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டான். ஆசிரியர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்த போது பால்வாடி போல உள்ளது என்று கூறி மீண்டும் பள்ளியில் இருந்து வெளியேறி குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவன் தற்போது சிறுமி கடத்தல் வரை சென்றுவிட்டான்.
கிராமத்தினர் யாராவது இவர்களிடம் உங்களால் கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்படுகிறது என்று கேட்டாலோ, விசாரணைக்கு வரும் போலீசாரிடம் வீடுகளை அடையாளம் காட்டினாலோ அன்று இரவே அடையாளம் காட்டியவர்களின் வீடுகளில் பிரச்சனை செய்வதும் வழக்கமாக வைத்துள்ளனர். இதேபோல திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த சிலர் இவர்களுக்கு எதிராக பேசியதால் அவர்களின ஆழ்குழாய் கிணறு நீர்மூழ்கி மோட்டார் கயிறுகளை அறுத்து மோட்டார்களை ஆழ்குழாய் கிணறுகளுக்குள் தள்ளிவிட்டும் உள்ளனர். அதனால் இவர்களைப் பற்றி யாரிடமும் மக்கள் பேசவே அச்சப்படுகின்றனர். இப்போது முருகானந்தம் தலைமறைவாகிவிட்டான் இனி எப்போது ஊருக்கு வந்து சிறுமி பிரச்சனையில் தலையிட்டவர்கள் வீடுகளில் பிரச்சனை செய்வானோ என்று பயமாக உள்ளது' என்கின்றனர்.
இவர்களை கீரமங்கலம், வடகாடு போலீசார் தங்கள் பகுதி திருட்டு புகார்களுக்கு விசாரித்தால் ஏராளமான திருட்டுகளை கண்டுபிடித்து பொருட்களையும் மீட்கலாம்.