2 government buses collide head-on, lost lives toll rises in thirupattur
சில தினங்களுக்கு தென்காசி மாவட்டத்தில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 8 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இன்று திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மீது விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் இன்று (30-11-25) மாலை காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அதே போல், அங்கு திருப்பூரில் இருந்து காரைக்குடி நோக்கி மற்றொரு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது இரு அரசு பேருந்துகளும், நேருக்கு நேர் மோதி கோர விபத்தானது.
இந்த விபத்தில் இரு பேருந்துகளில் இருந்த 8 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இரு பேருந்தின் ஓட்டுனர்களும் அதிவேகமாக வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த விபத்தால், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
Follow Us