திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தாராபுரம் சாலையில் இளைஞர் ஒருவரை, இருவர் சேர்ந்து தாக்கியுள்ளனர். அதனை மற்றொரு நபர் வீடியோ எடுத்துள்ளார். அதன் பின்னர் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான அதிர்ச்சி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதைபதைக்க வைத்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் பல்லடம் பகுதியைச் சேர்ந்த சூர்யா மற்றும் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரபு மற்றும் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த சிவா ஆகிய மூவரும் கட்டடப்பணி செய்து வருகின்றனர். இதில் சூர்யா என்பவர் தனது பெண் தோழி ஒருவரிடம் பேசி வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் அவருக்குத் தெரியாமல் நண்பரான பிரபுவும் அதே பெண்ணிடம் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த சூர்யா பிரபுவைத் தாக்குவதற்குத் திட்டமிட்டுள்ளார். இதற்காகப் பிரபுவை மது அருந்து அழைத்துச் சென்று அவரை சூர்யாவும், சிவாவும் கடுமையாகத் தாக்கி உள்ளனர்
மேலும் அவரது கழுத்தில் உடைந்த பாட்டிலை வைத்து மிரட்டியுள்ளனர். இதனை வீடியோவாக அவர்களே பதிவு செய்துள்ளனர். அதோடு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பல்லடம் போலீசார், சூர்யா மற்றும் சிவாவைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெண் தோழியிடம் பேசியதற்காக இளைஞரை கொடுமராக தாக்கி அடித்து சித்திரவதை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us