வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த கொசவன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 45). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர், தனது அப்பா, தங்கையுடன் 25 ஆடுகளை வைத்து, தினந்தோறும் நெட்டேரி ஏரியில் மேய்ச்சலில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில், இன்று கொசவன்புதூர் மூன்று கண் ரயில்வே பாலம் அருகே 25 ஆடுகளை வைத்து மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சென்னையிலிருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் ரயிலில் அடிபட்டு, 19 ஆடுகள் தூக்கி வீசப்பட்டு, கை, தலை, உடல் எனத் துண்டாகி பலியாகின.
இந்த நிலையில், ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது, மேய்ச்சலில் இருந்த 19 ஆடுகள் பலியாகியிருந்தன. மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கே.வி.குப்பம் வருவாய்த் துறையினர், ரயிலில் அடிபட்டு பலியான 19 ஆடுகளை மீட்டனர்.
மேய்ச்சலில் இருந்த 19 ஆடுகள் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம், கிராமப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.