17th century inscriptions unearthed that tell the story of tax exemption for the Shiva temple Photograph: (history)
சிவகங்கை படமாத்துரை அடுத்துள்ள நாட்டாகுடியில் 17 ம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட நாயக்கர் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
படமாத்துரை அடுத்துள்ள நாட்டாகுடியில் எழுத்துகளைக் கொண்ட கற்கள் கிடப்பதாக செய்தியாளர் சிவகுமார் சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா, செயலர் இரா.நரசிம்மன் நேரடியாக அவ்விடத்திற்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா செய்தியாளர்களுக்குத் தெரிவித்ததாவது.
நாட்டாகுடி பிள்ளையார் கோவில் வடக்குப் பகுதியில் கல்லெழுத்துடைய 2 கற்கள் கிடக்கின்றன, இக்கல்வெட்டுகள் இரண்டுமே ஒரே நாளில் வெட்டப் பெற்றுள்ளதோடு ஒரே செய்தியையும் குறிப்பிடுகின்றன. இக்கல்வெட்டில் கனகப்ப நாயக்கர் என்பவருடைய பெயர் இடம் பெற்றுள்ளது, இவர் இப்பகுதியின் அரசப்பிரதிநிதியாக இருந்திருக்கலாம்.
கல்வெட்டுச் செய்தி
சுபகிருது வருசம் ஆனி மாதம் 5ஆம் தேதி கனகப்ப நாயக்கருக்கு புண்ணியமாக சொக்கருக்கு விசேச கட்டளைக்கு பாதி மடப்புறமாக பாதி சர்வ மானியமாக நிலம் வழங்கப்பட்டுள்ளதை தெரிவிக்கின்றது, மற்றொரு கல்வெட்டும் இதே செய்தியை இதற்கு சேதம் செய்தவர்கள் காராம் பசுவைக் கொன்ற தோசம் பெறுவர் எனும் காப்புப் பகுதியுடன் முடிவடைகிறது.
கல்வெட்டு 1.
1.சுபகிருது வருசம் ஆனி
2. 5 கனகப்பநா
3.யக்கர் புண்ணி
4.யம் சாகரம் சொ
5.க்கநாயகற்கு வி
6.ஷேசெக் கட்டளை
7.க்குப் பாதி மடப்
8.பிறம் பாதி ஆக
9.சறுவமானியம்
10.இதுக்கு விற்க
கீழே ஐந்து வரிகள் தேய்ந்துள்ளன.
கல்வெட்டு 2
1.சுபகிருது வருஷம் ஆனி
2.உ 5 சாகரம் சொ
3.க்கற்கு அபிசே
4.க கட்டளைக்குப்
5.பாதிமடப்பிறம் பா
6.கனகப்பநாயக்க
7.புண்ணியம் இ
8.ற்கு விரதினம் பேசி
9.னார் காரம்பசு கொன்ற
10.தோஷம். என எழுதப்பட்டுள்ளது.
சர்வ மானியம்.
மடப்புறமாக வழங்கப்பட்ட நிலப்பகுதி போக மற்ற நிலங்கள் வரி நீக்கி சொக்கருக்கு விசேச கட்டளைக்கு சர்வ மானியமாக வழங்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
இவ்வூரில் சிவன் கோவில் ஏதும் இப்போது இல்லை இக்கல்வெட்டு இப்பகுதியிலிருந்து அழிந்து போன அல்லது வேறு பகுதி சிவன் கோவிலுக்கு வரிநீக்கி சர்வ மானியமாக நிலம் வழங்கிய செய்தியை தெரிவிக்கிறது, கல்வெட்டில் கலியாண்டு, சகாப்தம் போன்ற ஆண்டுகள் இடம்பெறாததால் நேரடியான ஆங்கில ஆண்டை கணக்கிட முடியவில்லை, இருந்தும் கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இது 17 ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம்.
சிவகங்கை தொல்நடைக் குழு அடையாளப்படுத்திய சிவகங்கைப் பகுதியில் நாயக்கர் ஆட்சியின் மூன்றாம் கல்வெட்டு இது என்பது குறிப்பிடத்தக்கது, என தெரிவித்தார்.
  
 Follow Us