மின் கட்டணம் 1,61,31,281 ரூபாய் கட்ட வேண்டும் என்று ஒரு ஏழைத் தாய்க்கு மின் வாரியத்தில் இருந்து குறுஞ்செய்தி வந்தது தென் மாவட்டத்தை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது.

Advertisment

நெல்லை மாவட்டத்தின் மூலக்கரைப்பட்டி மின்வாரிய உப கோட்டத்திற்குட்பட்ட மருதகுளம் கிராமத்தின் மாரியப்பன் மனைவி சேபா. அங்கன்வாடிப் பணியாளர். கணவர் காலமான நிலையில் தன் 3 மகள்களுடன் வசித்து வருபவர்.

இந்த மாதம் இவரது வீட்டிற்கு வழக்கம் போல் மின் கட்டண விபரம் வந்துள்ளது. அப்போது சேபா தனது செல்போன் மூலம் மின் கட்டணம் கட்ட முயன்றபோது அதில் 1 கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 ரூபாய் கட்ட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது கண்டு அந்தத் தாய்க்கு இருதயத் துடிப்பே தடுமாறிய நிலை ஏற்பட்டது.

சேபா தவிப்பும், அதிர்ச்சியுமாக இதை மின் வாரிய அலுவலக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல, பரபரப்பான அவர்கள் கோளாறை சரி செய்து, மின் கட்டண அளவு திருத்தம் செய்து அந்த இணைப்பிற்கு 494 ரூபாய் எனச் சரியாகக் கணக்கீடு செய்யப்பட்டு திருத்தம் செய்யப்பட்ட பிறகே அந்தத் தாயின் சுவாசம் சீராகியிருக்கிறது.

Advertisment

அதிகப் படியான மின் கட்டணம் வந்துள்ளது உண்மைதான். தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மனிதத் தவறு காரணமாக இது நடந்துள்ளது. மின் வாரியத்தில் அவுட் சோர்சிங் ஊழியர்கள் மூலமாக மின் கணக்கீடு செய்யப்படுகிறது. அதன் காரணமாக அந்தக் குளறுபடி நடந்திருக்கலாம். ஊழியர் அந்த வீட்டில் ரீடிங் எடுக்கும் போது சரியான அளவு 14,109 கிலோ வாட் என காட்டியுள்ளது. அதைக் கணினியில் பதிவேற்றம் செய்யும் போது 1410907 கிலோ வாட் என பதிவிட்டதால் மின் கட்டணம் கோடியில் வந்துள்ளது. இதனையறிந்து பிரச்சனை சரி செய்யப்பட்டது. என்கிறார்கள் மின்வாரிய தரப்பில்.