பா.ம.க. கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியின் தலைவர் பதவி மற்றும் அதிகாரம் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக நிர்வாகிகள் மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், அன்புமணி “100 நாட்களுக்கு உரிமை மீட்டு பயணம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

இத்தகைய சூழலில், பா.ம.க.வின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருந்தார். அதே சமயம், ராமதாஸுக்கு எதிராக ஆகஸ்ட் 9ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும், அன்புமணி ஆதரவாளருமான வடிவேல் ராவணன் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அன்புமணி பொதுக்குழுக் கூட்டம் நடத்துவதற்கு எதிராக ராமதாஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 9ஆம் தேதியான நேற்று அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராமதாஸ் கலந்துகொள்ளாத சூழலிலும், அவருக்கென தனியாக ஒரு நாற்காலி காலியாக விடப்பட்டிருந்தது.

இந்த பரபரப்பான சூழலில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் இன்று (10-08-25) மாலை ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க மகளிர் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மதுவினால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவதால் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை இல்லை என்ற நிலைமையை உருவாக்க வேண்டும், வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை காலம் தாழ்த்தாமல் நடைமுறைப்படுத்த வேண்டும், இடஒதுக்கீட்டின் அளவை சரியாக நிர்ணயித்திட சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும், நீட் தேர்வில் சோதனை என்ற பெயரில் மாணவிகளை வேதனைக்கு ஆளாக்கப்படுவது தடுக்க வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.