திருவண்ணாமலை மாவட்டத்தில் இளைஞரணி சார்பில் நடைபெறக்கூடிய வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டின் தலைமகன், நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசும்போது, ‘நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்’ என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார். நாளை திருவண்ணாமலைக்கு வரும் திமுக இளைஞரணி வடக்கு மண்டலத்தின் New Dravidian Stock, you are welcome” என்று தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியதாவது, “வருகிற ஞாயிறுக்கிழமை திருவண்ணாமலை மாவட்டத்தில் இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறுவதாக தலைமைக் கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனாலும் கழகத்துடைய தலைமைத் தொண்டன் என்கிற முறையில் உங்களை முறையாக அழைக்க விரும்புகிறேன். நம் எல்லோரையும் உடன்பிறப்புகள் என அழைக்க காரணம் என்ன தெரியுமா?. எல்லா குடும்பத்திலும் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை இருப்பார்கள். அதே போல் நம் கழகத்திலும் அதே பாச உணர்வோடு பழக வேண்டும் என்று தான் உடன்பிறப்பே என்று உறவுக் கொண்டாடுகிறோம்.
அப்படிப்பட்ட கழகத்துடைய இளைஞரணிச் செயலாளராக இருக்கும் தம்பி உதயநிதி ஸ்டாலின், உங்கள் எல்லோரையும் கொள்கை அளவில் வளர்க்கெடுக்க வேண்டும் என்று பாசறை பக்கம் தொடங்கி சமீபத்தில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த அறிவுத் திருவிழா வரைக்கும் ஏராளமான முன்னெடுப்புகளை செய்து வருகிறார். அதே போல் களப்பணிகளைச் செய்ய நிர்வாகிகளை இணைத்திருக்கிறோம் என்று உங்கள் பெயர் அடங்கிய பட்டியலை என்னிடம் அவர் காட்டினார். அதைப் பார்க்கும் போது 45 ஆண்டுகளுக்கு முன்பு 1980இல் நாங்கள் இளைஞரணி தொடங்கிய போது எப்படி பெருமையாக இருந்ததோ, அதே போல் பெருமையாகவும் கர்வமாகவும் இருந்தது.
இளைஞர்களாக பொறுப்புக்கு வந்திருக்கும் உங்களுக்கு திராவிடம் எனும் மக்களுக்கான மாபெரும் சித்தாந்த்தை நீங்கள் பேசப்போகிறீர்கள். திமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை அடுத்தடுத்து தலைமுறைக்கு கொண்டு போகிற தமிழ்நாட்டுடைய உரிமைக்காக, தமிழர்களுடைய உரிமைகளுக்காக போராடுகிற மாபெரும் வரலாற்று கடமை வந்திருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு இன்றைக்கு தனித்தன்மையோடு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நீங்கள் வரப்போகிறீர்கள் என்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது. தம்பி உதயநிதி, இந்த வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக்கான அழைப்பிதழை என்னிடம் கொடுத்து வடக்கு மண்டலத்தில் இருக்கிற 29 கழக மாவட்டங்கள், 91 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து கிளை, வார்டு அளவில் நியமிக்கப்பட்டிருக்கிற 1.30 லட்சம் இளைஞர்கள் வருகிறார்கள் என்று சொன்னார். இதை கேட்டதும் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஞாயிறு அன்று சந்திப்போம்” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/13/mkstalinvi-2025-12-13-15-54-14.jpg)