12th Student looking at question paper at exam center in Nagpur
மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பிப்ரவரி 10 முதல் மார்ச் 11 வரை இத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்கக் கண்காணிப்புக் குழு அனைத்து மையங்களிலும் இருக்கும் என தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. அந்த வகையில், மாநிலம் முழுவதும் 271 பறக்கும் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தேர்வு மையங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவு சுற்றளவில் உள்ள ஜெராக்ஸ் கடைகள் திறக்கப்படக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.அதே போலத் தேர்விற்கான நடைமுறை கட்டுப்பாடுகளுக்கான தூரத்தை 100 மீட்டரிலிருந்து மேலும் அதிகரிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறாக, கடும் பாதுகாப்புடனும், கண்காணிப்புடனும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சமயத்தில், நாக்பூரில் உள்ள தேர்வு மையத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் நடந்து கொண்டார். இதனால், அந்த மாணவியை ஆசிரியர்கள் சோதனை செய்தனர். அப்போது, தேர்வு தொடங்குவதற்கு முன்பே அந்த மாணவியின் செல்போனில் வேதியியல் வினாத்தாள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து உடனடியாக காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தனியார் பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஒருவர், இந்த வினாத்தாள்களை வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, இந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us