கீழணையில் இருந்து கொள்ளிடத்தில்  விநாடிக்கு 1.20 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால் சிதம்பரம் அருகே உள்ள தீவு கிராமங்களில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 27ம் தேதி மாலை மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் உபரிநீர் காவிரி ஆற்றில் 1,00,000 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. மேலும். பவானி ஆற்றிலிருந்து 10,000 கன அடியும், அமராவதி ஆற்றில் 15,000 கன அடியும் திறக்கப்பட்டு காவிரி ஆற்றில் 1,25,000 கன அடிக்கு மேல் உபரி நீர் சென்று  சென்றது. இதனைத்தொடர்ந்து மேலணை மற்றும் கல்லணையிலிருந்து கடந்த 28ம்  காலை 10 மணியளவில் சுமார் 40,000 கன அடி உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் இது படிப்படியாக நீர்வரத்திற்கேற்ப  அதிகரிக்கப்படும் என்று நீர்வளத்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில்  28ம் தேதி  மதியம் கீழணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டது. கொள்ளிடத்தில் வினாடிக்கு 58 ஆயிரத்து 784 கன அடி தண்ணீர் வந்தால் கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று முன்தினம் அதிகப்படுத்தப்பட்டு  வினாடிக்கு 57 ஆயிரத்து 761 கன தண்ணீர் திறந்து விடப்பட்டது.நேற்று  கொள்ளிடத்தில் விநாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரத்து 620 கன தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் வினாடிக்கு 1 லட்சத்து 20 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மேலும் பாசனத்துக்காக வடவாற்றில் வினாடிக்கு 1701 கன அடியும், வடக்கு ராஜன் வாய்க்காலில் வினாடிக்கு 300 கன அடியும், தெற்கு ராஜன் வாய்க்காலில் வினாடிக்கு 276 கன அடியும், குமிக்கி மண்ணியாற்றி வினாடிக்கு 110 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்று பகுதியில் இருக்கு தீவு கிராமங்களாக அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலபாடி, திட்டுக்காட்டூர், பெராம்பட்டு ஆகிய கிராமங்களில் வருவாய்த்துறை மூலம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள் சிதம்பரம் ரமேஷ், அணைக்கரை கொளஞ்சிநாதன் மற்றும் உதவிப் பொறியாளர்கள், நீர்வளத்துறை பணியாளர்கள் கொண்ட குழுவினர் கொள்ளிடக்கரை பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். புதன்கிழமை (30/07/2025)  மதியம் சுமார் 1 மணியளவில் மேட்டூரில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.