புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜநாயகம். இவரது சொந்த ஊர் ஆவுடையார்கோவில் அருகே உள்ள சிறுமருதூர் கிராமம். இங்கு இவருக்கு தென்னந்தோப்புடன் கூடிய வீடு உள்ளது. இந்தப் பகுதியில் கதண்டுகள் கூடுகட்டி இருந்துள்ளது.கடந்த சில நாட்களாக இந்தப் பகுதியில் கதண்டுகள் வெளியில் சுற்றியுள்ள நிலையில், இன்று மதியம் அந்த வழியாக சாலையில் சென்ற பூவலூர் தினேஷ் (22), ரித்தீஷ் (14), அகஸ்தீஸ்வரன்(14), சிறுமருதூர் செல்வம்(48), பாக்கியமேரி(65) ஆகியோரை கடித்துள்ளது.

Advertisment

இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் உடனடியாக அந்த சாலையில் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க சாலையை மூடியுள்ளனர்.இந்நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கதண்டுகளை விரட்டுவதற்காக இன்று மாலை இருட்டும் நேரத்தில் இடம் பார்க்க ஆவுடையார்கோயில் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகர் (57) தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அவினாஷ்(27), பாலகிருஷ்ணன்(26), கிருஷ்ணபாண்டி(26) ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது பறந்து கொண்டிருந்த கதண்டுகள் தீயணைப்பு வீரர்களை விரட்டி விரட்டி கடித்துள்ளது. இதில் 4 தீயணைப்பு வீரர்களும் காயமடைந்துள்ளனர்.

Advertisment

மேலும், அந்த வழியாக பள்ளி வாகனம் செல்ல மூடியிருந்த சாலையை திறந்துவிட்டிருந்ததால் அந்த வழியாக சென்ற வாட்டாத்தூர் முத்துக்கிருஷ்ணன்(31), வடமருதூர் கோபாலகிருஷ்ணன்(36) ஆகியோரையும் கதண்டுகள் கடித்துள்ளது. அடுத்தடுத்து கதண்டுகள் கடித்து காயமடைந்த தீயணைப்பு வீரர்கள் உள்பட காயமடைந்தவர்களை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஒரேநாளில் தீயணைப்பு வீரர்கள், சிறுவர்கள், பெண்கள் என அடுத்தடுத்து 11 பேரை கதண்டுகள் கடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடனே அந்த கதண்டுகளை அப்புறப்படுத்தி பொதுமக்களை காக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment