கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 11 நாட்டிய குதிரைகளின் ஆட்டத்துடன் பக்தர்கள் பால்குடம், வேல் காவடி தூக்கிச் சென்று வழிபட்டனர்.
திருவிழாக்கள் என்றாலே கிராமங்களில் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு கடந்த இரண்டு வாரம் முன்பு ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து படையலிட்ட நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு காப்புக்கட்டுதலுடன் ஆடிப் பெருந்திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரங்களில் வழிபாடுகளும், வான வேடிக்கைகளுடன் மங்கல வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் புடைசூழ அலங்கார வாகனங்களில் அம்மன் வீதி உலாவும் இரவு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/26/a4563-2025-07-26-22-44-47.jpg)
இந்நிலையில் கீரமங்கலத்தில் ஒவ்வொரு நாளும் பக்தர்கள், கரைகாரர்களால் பால்குடம் எடுத்தல், அன்னதான நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இன்று சனிக்கிழமை காலை டிரம்ஸ் இசைக் கலைஞர்களின் இசையோடு 11 நாட்டிய குதிரைகளின் ஆட்டத்துடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் தூக்கிச் சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
இதில் குழந்தைகள் ஏராளமானோர் பால்குடம் தூக்கிச் சென்றனர். ஆங்காங்கே வான வேடிக்கைகளும் வண்ணக் காகிதங்களை பறக்கவிட்டும் இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஆராவாரமாக சென்றனர். ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அன்னதானமும் வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழாவும், திங்கள் கிழமை மாலை தேரோட்ட திருவிழாவும் நடக்கிறது. திருவிழாவைக் காண சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளம் கலந்து கொள்கின்றனர். திருவிழா ஏற்பாடுகளை விழாக் குழுவினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்து வருகின்றனர்.