தஞ்சாவூர் மாவட்டம், ஆவணம் கிராமத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் திருஞானத்தின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். அந்த நிகழ்வில் கலந்துகொண்ட சாணாகரை பாலு (71) என்பவர், நிகழ்ச்சி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். புதுக்கோட்டை- தஞ்சாவூர் மாவட்ட எல்லை கிராமமான புளிச்சங்காடு கைகாட்டியில் பேராவூரணி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலை ஓரத்தில் இருளில் நின்ற ஒரு லாரியின் பின்புறத்தில் மோதியுள்ளார். அதில் பாலுவுக்கு படுகாயமடைந்து, உயிருக்கு போராடியுள்ளார்.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அருகில் 8 கி.மீ. தூரத்தில் உள்ள பேராவூரணி ஆம்புலன்ஸ் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், 20 கி.மீ. தூரத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியிலிருந்து ஆம்புலன்ஸ் வந்தது. அதற்குள் விபத்தில் காயமடைந்த பாலு உயிரிழந்தார். அங்கிருந்த மக்கள், "8 கி.மீ. தூரத்தில் உள்ள பேராவூரணி ஆம்புலன்ஸ் வந்திருந்தால் வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிரை காப்பாற்றி இருக்கலாம்” என்றனர். ஆனால், சம்பவம் நடந்த செவ்வாய்க்கிழமை அன்று 24 மணி நேரமும் இயங்கும் பேராவூரணி 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பேராவூரணி 108 ஆம்புலன்ஸ் சேவை ஏன் நிறுத்தப்பட்டது? என்று சில ஊழியர்களிட்ம் கேட்டோம்... அதற்கு, அவர்கள், “தஞ்சாவூர் மாவட்டத்தின் தென்கோடியில் அமைந்த பேராவூரணி தொகுதி, தென்னை விவசாயம் அதிகமுள்ள பகுதியாகும். இங்கு பாம்பு கடித்து பலர் பாதிக்கப்படுவதால், அவசர சேவை அவசியமாக உள்ளது. எனவே, பேராவூரணி அரசு மருத்துவமனையில் ஒரு 108 ஆம்புலன்ஸும், சேதுபாவாசத்திரத்தில் மற்றொரு ஆம்புலன்ஸும் செயல்படுத்தப்பட்டு முழு சேவை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 6 மாதமாக 108 ஊழியர்கள் பற்றாக்குறையால், சேதுபாவாசத்திரம் 108 ஆம்புலன்ஸ் திங்கட்கிழமை மற்றும் பேராவூரணி 108 ஆம்புலன்ஸ் செவ்வாய்க்கிழமை 24 மணி நேரமும் முழுமையாக நிறுத்தப்படுகிறது.
இதனால், இந்த நாட்களில் விபத்து உள்ளிட்ட அவசர மருத்துவ உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் கிடைக்காமல், புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மற்றும் கீரமங்கலம் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆகஸ்ட் 5-ம் தேதி வடகாடு மற்றும் கீரமங்கலம் ஆம்புலன்ஸ்கள் வேறு இடங்களுக்கு சென்றதால், 20 கி.மீ. தூரத்தில் உள்ள ஆலங்குடி 108 ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது. அதனால்தான் காலதாமதம் ஏற்பட்டது. எனவே, 108 பணியாளர்கள் பற்றாக்குறையை உடனடியாக நிரப்பினால் மட்டுமே பேராவூரணி தொகுதி மக்களின் உயிர்களை காப்பாற்ற முடியும்” என்றனர்.
மேலும், பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு கூடுதல் சிகிச்சை தேவைப்படும் போது, 55 கி.மீ. தூரத்தில் உள்ள புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினசரி 3 முதல் 5 பேரை பேராவூரணி 108 ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. இந்த நேரங்களில் பேராவூரணி சுற்றுவட்டார கிராமங்களுக்கான அவசர சேவை பாதிக்கப்படுகிறது. எனவே, உள்ளூர் சேவைக்கு ஒரு ஆம்புலன்ஸும், மேல் சிகிச்சைக்காக வெளியூர் செல்வதற்கு மற்றொரு ஆம்புலன்ஸும் 24x7 சேவைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தப் புகார்கள் குறித்து 108 தஞ்சை மாவட்ட அதிகாரி கார்த்திக்கிடம் கேட்டபோது, "பணியாளர்கள் பற்றாக்குறை, பணியாளர்கள் நீண்ட விடுப்பு காரணங்களால் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் அதனை சரி செய்யும் விதமாக புதிய ஓட்டுநர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மருத்துவ நடவடிக்கை நிபுணரும் கேட்டு பெறப்பட்டுள்ளார். ஒரிரு நாட்களில் அவர்கள் பணிக்கு சேர்ந்துவிடுவார்கள். இனிமேல் தடையின்றி 108 ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களுக்கு கிடைக்கும்” என்றார்.
மாவட்ட அதிகாரி உறுதியாகக் கூறியதால், சேவை தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/08/104-2025-08-08-17-07-43.jpg)