கோவையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வெளியே சென்ற தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 103 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜன். இவருடைய மனைவி ஜெபா மார்ட்டின். வசிப்பிடத்திற்கு அருகிலேயே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஜெபா மார்ட்டின் குடும்பத்துடன் சென்றுள்ளார். 

Advertisment

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை எல்லாம் முடித்துக் கொண்டு இன்று வெள்ளிக்கிழமை காலை குனியமுத்தூர் வந்துள்ளார். வீட்டிற்குள் நுழைந்ததும் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை வைப்பதற்காக பீரோவை திறந்தபோது பீரோவில் ஏற்கனவே வைத்திருந்த சுமார் 103 சவரன் காணாமல் போனது தெரிந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் திருடப்பட்டது தெரிந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெபா மார்ட்டின் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  உடனடியாக சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்த போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். பீரோ உடைக்கப்படாமல் நகைகள் திருடப்பட்டது தெரிந்தது. உடனே தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான தடையங்களை சேகரிக்கும் பணி தொடங்கியது.  

Advertisment

கொள்ளை நடந்துள்ள வீட்டில் கதவு மற்றும் பீரோ ஆகிவையை உடைக்கப்படாமல் பணம் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் தெரிந்த நபர்களே நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மாநகர போலீசார் தனிப்படை அமைத்து தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.