புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே அரிமழம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளாளவயல் சுப்பிரமணியர்கோவில் வடக்குப் பக்கம் யாரும் உள்ளே நுழைய முடியாத கருவேல முட்புதரில் பெரிய கருங்கல் சிற்பம் ஒன்று கிடக்கிறது. சாய்ந்து கிடக்கும் சிற்பத்தின் மேல் இலைகள் கொட்டி தூர்ந்து என்ன உருவம் என்றே தெரியாத அளவில் உள்ளது என்ற தகவல் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டனுக்கு தகவல் வந்ததையடுத்து மணிகண்டன் முட்புதர்கள் அடர்ந்த பகுதிக்குச் சென்று கருங்கல் சிற்பத்தை மீட்டு கழுவி சுத்தம் செய்து பார்த்து இது தமிழ்நாட்டில் மகாவீரர் சிற்பங்களில் அபூர்வமான சிற்பம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 40 க்கும் மேற்பட்ட இடங்களில் சமண சிற்பங்கள், சமணச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன , அவற்றில் 10 க்கும் மேற்பட்ட சமண சின்னங்களை எமது புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் கள ஆய்வில் அடையாளப்படுத்தி வருகிறோம். ஆவுடையார் கோவில் பகுதியை பொறுத்தவரையில் அருகிலிருக்கும் சிறுகானூர் எனும் இடத்தில் கடந்த ஆண்டு ஒரு "மகாவீரர் சிற்பம் சம்மடக்காளி" என்ற பெயரில் பொதுமக்கள் வழிபாட்டிலிருப்பதை அடையாளப்படுத்தி இது மகாவீரர் என்பதை உறுதிப்படுத்தி உள்ளோம்.
மகாவீரர் சிற்பம் :
வெள்ளாளவயலில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்தச் சிற்பம் 124 செ. மீ.உயரமும், 72 செ.மீ அகலமும் கொண்டுள்ளது. சிற்ப அமைதியின் அடிப்படையில் ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வழிபாட்டிற்கு வந்ததாக இருக்கலாம்.
ஆவுடையார் கோயிலுக்கு மேற்கு புறமாக சமணத் தடயங்கள் இருந்ததாக நம்பப்பட்டு வந்தது, ஆனால் அதற்குரிய ஆதாரங்கள் ஏதும் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ஆவுடையார்கோயிலுக்கு மிக அருகிலேயே மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதன் மூலமாக ஆவுடையார்கோவிலில் வரையப்பட்டுள்ள சமண கழுவேற்ற ஓவியங்கள் மற்றும் வாய்மொழி தகவல்கள் , மாணிக்கவாசகர் வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளுக்கு இந்த கண்டுபிடிப்பு முக்கிய சான்றாக அமையும் என்று ஆ.மணிகண்டன் கூறியிருந்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/24/a4902-2025-08-24-10-12-59.jpg)
இந்த செய்தி நக்கீரன் இணையம் மற்றும் பல செய்தித் தாள்களிலும் வெளியான நிலையில் ஆய்வாளர்கள், பொதுமக்களிடம் பேசு பொருளானது.இந்நிலையில் தான் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், தலைமைச் செயலகம், சென்னை டாக்டர் க.மணிவாசகம் அரசு அருங்காட்சியங்களின் இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆவுடையார்கோயில் அருகே வெள்ளாளவயல் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் கல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது செய்திகளாக வந்துள்ளது. இந்த சிலையை மீட்டு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தும் உரிய வகையில் ஆய்வு செய்து அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்து நடவடிக்கை பற்றிய தகவல்களை தெரிவிக்குமாறு கேட்டுள்ளார்.
கூடுதல் தலைமைச் செயலாளரின் உத்தரவையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் ஆவுடையார்கோயில் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் சில நாட்களுக்கு முன்பு மகாவீரர் சிலையை மீட்கச் சென்றுள்ளனர். ஆனால், நம்ம ஊரில் கிடைத்த சிலையை வருவாய்த்துறையின் தூக்கி போக வந்திருக்காங்க என்ற தகவல் கிராமத்திற்குள் பரவிய நிலையில் ஏராளமான கிராம மக்களும் மகாவீரர் சிலை கிடைத்த பகுதியில் கூடிவிட்டனர்.
மகாவீரர் சிலையை நாங்கள் கொடுத்து விட்டால் நாங்கள் வறட்சியால் பாதிக்கப்படுவோம். அதனால் மகாவீரர் சிலையை தூக்கிச் செல்ல அனுமதிக்க மாட்டோம், கோயில் கட்டி இந்த சிலையை அமைக்கப்போவதா கூறியுள்ளனர். இதனால் சிலையை மீட்க வருவாய்த்துறையின் வெறுங்கையோடு திரும்பினர்.
இதனையயடுத்து ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையிலும் சிலையை அருங்காட்சியகம் தூக்கிச் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர். இந்நிலையில் தான் 1000 ஆண்டுகள் பழமையான பொக்கிஷமாக கிடைத்துள்ள மகாவீரர் சிலையை மீட்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் இந்த சிலை நம் ஊரில் இருப்பது தான் நம் ஊருக்கு பெருமை. அதனால் சிலையை கண்டெடுத்த இடத்திலேயே வைத்து பூஜைகள் செய்வோம் என்று கிராம மக்கள் முடிவெடுத்து அதன் படியே நேற்று ஏராளமான பெண்கள் உட்பட ஏராளமான கிராம மக்கள் கருவேலங்காட்டுக்குள் ஒத்தையடிப் பாதையில் சென்று மகாவீரர் சிலைக்கு மாலைகள் அணிவித்து சூடம் ஏற்றி பூஜைகள் செய்து தரிசனம் செய்தனர்.
அப்போது பூஜைகள் செய்த கிராம பூசாரி திடீரென சாமியாடி எனக்கு கோயில் கட்டி கும்பிட்டால் ஊரையும் நாட்யைும் நல்லா வச்சுக்குவேன் என்று கூறினார். இதனையடுத்து மகாவீரர் சிலையை அருங்காட்சியகத்திற்கு கொடுக்கமாட்டோம் என்று முடிவெடுத்துள்ளனர் கிராம மக்கள்.