கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா கழுதூர் அரியநாச்சி கிராமங்களில் கடந்த 16-ந் தேதி சோளப்பயிரில் வேளாண் பணியில் ஈடுபட்டிருந்த ராஜேஸ்வரி,சின்ன பொண்ணு, கணிதா, பாரிஜாதம் ஆகியோர் இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் தலா 5 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்தார். இன்று வரையிலும் அதற்கான நிவாரண நிதி வழங்கப்படவில்லை. தாயாரை இழந்த குடும்பங்கள் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று உயிரிழந்த அனைத்து குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் மூலமாக கோரிக்கை மனுவை அனுப்பி வைத்துவிட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பி ஆர்.பாண்டியன், ''தமிழ்நாட்டில் இடி தாக்கியும், வனவிலங்கு தாக்குதலால் தொடர்ந்து விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் மரணம் அடைவது தொடர்வது வேதனை அளிக்கிறது. இறப்பவர்களுக்கு நடப்பாண்டு ரூ 5 லட்சம் நிவாரண நிதி என அறிவித்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/22/a5599-2025-10-22-17-33-55.jpg)
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.10 லட்சம் வழங்குகிற தமிழக அரசு, உணவு உற்பத்தி செய்கிற விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மறுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குடும்பப் பெண்கள் 4 பேர் உயிரிழந்திருக்கிற சம்பவம் வேதனை அளிக்கிறது.
கடந்த 16ஆம் தேதி உயிரிழந்து இதுவரையிலும் அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. எனவே இனி வனவிலங்குகள் மற்றும் பேரிடரால் உயிரிழக்கும் குடும்பங்களுக்கு தலா ரூ 25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உத்தரவாதப்படுத்த வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தை கைவிட்டுள்ள திமுக அரசு, விவசாயிகளுக்கு தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாக உரிய காப்பீடு திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும். உயிரிழக்கும் குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளுக்கு உயர்கல்வி வரை இலவச கல்வி உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். இதுகுறித்த கோரிக்கை மனுவை கடலூர் மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
கழுதூர் கிராமம் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனின் சொந்த கிராமம் ஆகும். அமைச்சர் கிராமத்திலேயே மரணம் அடைந்து ஒரு வாரம் கழிந்த நிலையில் நிவாரண நிதி வழங்கப்படாதது மிகுந்த வெட்கக்கேடானது. தமிழக முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்'' என்றார்.
கோவை மண்டல தலைவர் ஏ எஸ் பாபு, சேலம் மண்டல தலைவர் ஆத்தூர் பெருமாள்,கடலூர் மாவட்ட செயலாளர் மணிக்கொல்லை ராமச்சந்திரன், தலைவர் அன்பழகன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன்,கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் அருணாச்சலம் ,மாவட்ட பொருளாளர் ராஜா, குடவாசல் ஒன்றிய தலைவர் வி.சாமிநாதன், நகர செயலாளர் சரவணபாபு, பொள்ளாச்சி ஆனந்தன், உயர் மட்டக்குழு உறுப்பினர் ராஜேஷ்கண்ணன்.உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.