சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் முகமாக மண்டல மாநாடுகளை நடத்தி வருகிறது திமுக. அதன் தொடர்ச்சியாகத் திருச்சியில் திமுக நிர்வாகிகள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டிற்கான பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர் திமுகவினர். முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றிடும் பொருட்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடுகள், வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடுகள், என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி மாநாடுகள் எனத் தொடர்ச்சியாக பல்வேறு மாநாடுகளை நடத்தி முடித்துள்ளது திமுக. இந்த மாநாடுகள் ஒவ்வொன்றிலும் 1 லட்சம் – 1.5 லட்சம் வரையிலான கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் தொடங்கி , வெல்லும் தமிழ்ப்பெண்கள் வீடு வீடான பரப்புரை வரை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவை எல்லாம் வெறும் டிரெய்லர் தான். வரும் மார்ச் 9 திருச்சியில் 10 லட்சம் கழக நிர்வாகிகள் கூடும் மாபெரும் கழக நிர்வாகிகள் மாநாடு தான் மெயின் பிக்சரே என அறிவித்திருந்தார் ஸ்டாலின். முதன்மைச் செயலாளர் கே. என். நேருவின் மேற்பார்வையில் திருச்சி சிறுகனூரில் மாநாட்டுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த மாபெரும் மாநாடு சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. அதோடு வாகன நிறுத்துமிடங்கள் தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 40,000 முதல் 50,000 பேருந்துகளை நிறுத்தும் வகையில் விரிவான வாகன நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
அதிநவீன எல்.இ.டி (L.E.D.) திரைகளுடன் கூடிய பிரம்மாண்ட மேடை அமைப்பு, 110 அடி உயரக் கொடிக்கம்பம், 10 லட்சம் நிர்வாகிகளுக்கும் அறுசுவையான சைவ மற்றும் அசைவ உணவு ஏற்பாடுகள், 10 லட்சம் நிர்வாகிகளும் அமர்வதற்குப் போதிய இருக்கைகள், குடிநீர் மற்றும் சிற்றுண்டி வசதிகள் என நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மிக மிகப் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிர்வாகிக்கும் தனித்தனியாக ஸ்டாலினின் செய்தியுடன் கூடிய அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
திமுக மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் கூட்டங்கள் நடத்தி மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் குறித்துக் கலந்தாலோசித்து, மாவட்டங்கள் வாரியாக மாநாட்டிற்கு வரும் வாகனங்களின் விவரங்கள் திரட்டப்பட்டு உள்ளன.மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாராகும் இந்த நிர்வாகிகள் மாநாடு, நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு முழுக்க உள்ள திமுக நிர்வாகிகள் கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிட்டனர்."வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றியைப் பெற்று மீண்டும் திராவிட மாடல் 2. O ஆட்சி அமையும் அதை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் இம்மாபெரும் நிர்வாகிகள் மாநாடு இருக்கும். மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவர் ஸ்டாலின், மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராவது உறுதி " என்கின்றனர் மா.செ.க்கள்.
Follow Us