பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்குத் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 13 நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்யும் முனைப்பில் போலீசார் அங்குக் குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
அதே போன்று இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவானது தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (02.09.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வாதிடுகையில், “தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட வழக்கறிஞர்களை காவல்துறையினர் தாக்கினர்.
பெண் வழக்கறிஞர்களிடம் காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டனர்” என காவல்துறையினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “தூய்மை பணியாளர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை காவல்துறையினர் தாக்கியது, அத்துமீறியது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் இந்த விவகாரம் தொடர்பாக விரைந்து விசாரணை நடத்தி முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.