Advertisment

மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் தெரியும், ஆனால் பஸ் கட்டண போராட்டம் பற்றி தெரியுமா..?

1991 students gathered against bus fare hike

1991 students gathered against bus fare hike

Advertisment

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு என்ற தமிழரின் பாரம்பரிய விளையாட்டைக் காக்க மாணவர் பெரும்படையாய் திரட்டு போராட்டக்களங்களை ஏற்படுத்தி ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்ததை நாம் அறிவோம். ஆனால், இப்படிப்பட்ட ஒரு மாணவர் போராட்டத்தை தமிழகம் கண்டது இது முதன்முறை அல்ல. இந்தி எதிர்ப்பு, இலங்கை பிரச்சனை, தமிழ்நாடு பெயர் மாற்றம் என தமிழக மாணவர்களின் போராட்டக்களம் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. இந்த சமூகம் எதாவது ஒரு பிரச்சனையைச் சந்திக்கும் போதெல்லாம் , பல ஒடுக்குமுறைகளையும், துயரங்களையும் கடந்து மாணவர்கள் அந்த பிரச்சனையின் தீர்வை நோக்கி தங்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அந்தவகையில், 1991 ஆம் ஆண்டு தமிழகத்தில் பேருந்து டிக்கெட் விலை உயர்த்தப்பட்ட போது, அதற்கெதிராக நடைபெற்ற மாணவர் போராட்டம் குறித்து 2.11.1991 மற்றும் 9.11.1991 நக்கீரன் இதழ்களில் வெளியான கட்டுரை மற்றும் பேட்டிகளின் தொகுப்பு.

அரசே அமுக்கிய 80 கோடி... பஸ் கட்டண உயர்வு.

பதினாறாம் தேதி.

புதன் காலை பத்து மணி.

சென்னை மவுண்ட்ரோட்டின் மத்தியப்பகுதியில் மாணவர்கள் கிளர்ச்சி.

மாணவர்களைச் சுற்றி நின்றிருந்த போலீஸ்காரர்களின் முகத்தில் பயம்.

‘‘ஏன்யா! ஏதோ ஐநூறு பேர்...ஆயிரம் பேருதான் வருவான்னு பாத்தா ....இவ்வளவு கூட்டம் வந்துருக்கு. எப்படி சமாளிக்கிறதுனே விளங்கல.’’ இரண்டு இன்ஸ்பெக்டர்கள் பதற்றத்தோடு பேசிக் கொண்டனர். கோட்டையை நோக்கிப் புறப்பட்ட மாணவர் கிளர்ச்சிப் பேரணி, அணையை உடைத்த வெள்ளம் போல மவுண்ட் ரோட்டை பரப்பி நின்றது.

‘‘ஜெயலலிதா ஒழிக! பஸ் கட்டணத்தை உயர்த்தாதே!’’ என்ற கடும் கோஷத்துடன் முன்னேறிய பேரணி எதிரே வந்த பல்லவன் பஸ்களின் கண்ணாடிகளைக் காணாமல் போகச்செய்தது. இதைக்கண்ட மவுண்ட்ரோட்டின் இரண்டு பக்கம் உள்ள கண்ணாடி போட்டிருந்த கடைகள் அனைத்தும் தங்கள் கடைகளின் ஷட்டர்களை இழுத்து முகங்களை மூடிக்கொண்டன.

Advertisment

விண்ணை அதிர வைக்கும் கோஷத்துடன் சென்ற மாணவர்களை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு போலீஸார் தடுத்து நிறுத்தினர். ரோட்டில் நின்று கொண்டிருந்த மாணவர்களைப் பார்த்து இந்திய மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் கோவிந்தராஜன் பேசும் போது, ‘‘பஸ் கட்டண உயர்வை எதிர்த்து நாங்கள் பேரணி நடத்த வேண்டும் என்று அனுமதி கேட்டோம்...அவர்கள் தரவில்லை...தர மாட்டோம் என்று சொன்னார்கள். இப்பொழுது அதையும் மீறித்தான் இந்தப் பேரணியை நடத்தினோம். ஆட்சியாளர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இனிமேல் நீங்கள் அனுமதி தர வேண்டும் என்ற அவசியமில்லை. எங்கள் கருத்தை நாங்கள் சொல்வதற்கு உரிமையிருக்கிறது. எங்களை யாரும் அடக்குமுறையால் அடக்கிவிட முடியாது’’ என்றவுடன் மாணவர்கள் அனைவரும் ‘ஹே’ என்று ஆக்ரோசமாகக் கத்தினர்.

நாங்கள் கோட்டைக்கு சென்றே தீருவோம். என்று விடாப்பிடியாக புறப்பட்டுவிட்ட பல மாணவர்களை கல்லூரித் தலைவர்கள் சமாதானப் படுத்தினர்.

இதற்கிடையில் மாநிலக்கல்லூரி மாணவர்கள் திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோட்டில் ஜெயலலிதா ஒழிக! என்று கோஷம் போட்டு வர அவர்கள் மீது சில அ.தி.மு.க. கரைவேட்டிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்த மாணவர்கள் தப்பியோடி பேரணி நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

புதுக்கல்லூரி மாணவர்கள் தங்கராஜ் தலைமையில் ராயப்பேட்டை வழியாக வந்தபோது,‘‘டேய் எங்க தலைவிய ஏதாவது நாக்கை வச்சுப் பேசுன.. தொலைச்சுடுவேன் என்று கத்திக்கொண்டு சிலர் குண்டாந்தடிகளுடன் மாணவர்களை விரட்ட, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஒடிவந்து விட்டனர்.

‘‘ஏங்க...பேரணி போயிடுச்சானுதான் கேட்டேன். என்னாடா! ...பேரணி நடத்துறீங்க னு அடிச்சுட்டாங்க’’ என்றனர்.

வடசென்னை அம்பேத்கர் கல்லூரியில் இருந்து பேரணியில் கலக்க பாரிமுனை வழியாக வந்து கொண்டிருந்த மாணவர்களின் கூட்டத்துக்குள் சில வெளியாட்கள் நுழைந்துகொண்டு அவர்களும் மாணவர்கள் போல நடித்து ரகளை செய்து ஒரு பல்லவன் பஸ்ஸின் கண்ணாடியைப் பதம் பார்க்க தயாராக இருந்த போலீஸ் அப்படியே அந்த மாணவர்களை சுற்றி வளைத்து முப்பது பேரை பாரிமுனை ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்று காட்டுத்தனமாக அடித்துள்ளனர்.

போலீஸாரிடம் அடிவாங்கிய அம்பேத்கர் கல்லூரி மாணவர் வரதராஜன் நம்மிடம் பேசும்போது, ‘‘ஏண்டா உங்க மூஞ்சிக்கு பேரணியாடா நடத்துறீங்க’’ன்னு சொல்லி பூட்ஸ் காலாலேயே என்னை எத்துனாங்க. ஒவ்வொருத்தனையும் தனியா நிறுத்தி ஆறு ஏழு போலீஸ்காரங்க சேர்ந்து அடிச்சாங்க. சாயங்காலம் வரைக்கும் அடிச்சாங்க. அப்புறம் என்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனாங்க. ராத்திரி ஒன்பது மணிக்கு இந்தியக் குடியரசுக்கட்சியைச் சேர்ந்த டி.தயாளன்தான் வந்து கூப்பிட்டுப் போனாரு. எங்கள வெள்ளைப் பேப்பர்ல கையெழுத்துப் போடச் சொன்னாங்க. நாங்க போடல’’ என்றார். அவரது தலையில் கைகளில் கால்களில் காயங்கள் அப்படியே அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன.

வரதராஜனைத் தவிர ராஜ்குமார், சுரேஷ், பூவண்ணன், கோகுல், இஸ்ரேல் ஆகியவர்கள் நிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது.

பஸ் கட்டணம் உயர்ந்ததைக் கண்டித்துப் பேரணி நடத்தப் போன மாணவர்களைக் கண்டித்து ஊர்வலம் நடத்தப் போன மாணவர்கள் மீது சில சமூக விரோதிகளும், போலீஸாரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பேரணி நடத்திய இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து கல்லூரியைப் புறக்கணித்து பஸ் மறியலில் தீவிரமாகவும் இறங்கியுள்ளனர். பஸ் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்கும் வரை டிக்கெட் எடுக்கமாட்டோம் என்ற உறுதியோடு போராடும் அவர்களோடு, பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவர் அணியும் இணைந்துள்ளது. இது தவிர அனைத்திந்திய மாணவர் பெருமன்றமும் அகில பாரத வித்யார்த்த பரிஷத்தும் தனது மாணவர்களை ரோட்டில் இறக்க முடிவு எடுத்துள்ளது. நாளுக்கு நாள் மாணவர்கள் தெருவில் இறங்குவது கூடுதலாகிக் கொண்டே இருக்கிறது.

மாணவர்களின் இந்தப் போராட்டத்துக்கு அரசு செவி சாய்க்காவிடில் விளைவு படு மோசமாயிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

பஸ் கட்டணத்தை தமிழக அரசு திடீரென்று அறுபது சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இதன்மூலம் அரசு பஸ்களுக்கு வருடத்துக்கு இருநூறு கோடியும், தனியார் முதலாளிகளுக்கு எண்பது கோடி ரூபாயும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இந்த தடாலடி பஸ்கட்டண உயர்வில் ஊழல் நடந்துள்ளது என்று பல அரசியல் பெருந்தலைகள் வெளிப்படையாகக் கூற, நாம் அரசு போக்குவரத்து துறைகளிலும் அரசியல் மேல்மட்டத்திலும் தீவிர விசாரணையைத் துவக்கினோம்.

கட்டண உயர்வுக்கு முக்கியக் காரணம் அரசே அமுக்கிய எண்பது கோடி ரூபாய்தான். புதிய பஸ்களின் வருமானத்தில் தேய்மானச் செலவு, புதிய மெசின்கள் வாங்க ஆண்டுக்கு எண்பது கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தப் பணத்தில்தான் அனைத்து செலவுகளையும் சரிக்கட்ட வேண்டும். ஆனால் அரசு அப்படிச் செய்யாமல் தேய்மான செலவுகள் அனைத்தையும் போக்குவரத்துக் கழகங்களின் தலையிலேயே கட்டி விடுகிறது.

ஒரு பஸ் தன்னுடைய முழு பண மதிப்பு அனைத்தையும் முதல் நான்கு வருடத்திலேயே சம்பாதித்துக் கொடுத்து விடுகிறது. மேலும் தன்னுடைய செலவுகளையும் பார்த்துக் கொள்கிறது. உதாரணத்துக்கு ஒரு போக்குவரத்துக் கழகம் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு கணக்கு ஒன்றில், தேய்மானச் செலவாக ஆறு கோடியே அறுபத்தி இரண்டு லட்சத்தை அரசாங்கம் கொடுத்திருக்குமேயானால் ரூ 573 லட்சம் பேருந்து கழகத்துக்கு லாபம் கிடைத்திருக்கும். ஆனால் அரசாங்கம் தான் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்காததால் 89 லட்சம் நஷ்டமாகக் காட்டப்படுகிறது.

இதை பல்லவன் போக்குவரத்துத் துறை உயரதிகாரி ஒருவர் பேசும் போது ‘‘குடிகாரப் புருசனுக்கு பொண்டாட்டி எவ்வளவுதான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சுக் கொடுத்தாலும் சந்தோசப் பட மாட்டான்...அடிச்சுத் துன்புறுத்துவான். அந்த மாதிரிதான் எங்க நிலைமையும் ஆகிப் போச்சு’’ என்றார். இதைப் போல பதினைந்து போக்குவரத்துக் கழகங்களின் செலவினைக் கூட்டிப் பார்த்தால் பல கோடிகளைத் தாண்டும்.

அரசாங்கத்தின் அடுத்த தில்லு முல்லு மாணவர்களின் இலவச பஸ் பாஸ் வழங்குவதில் நாறிப் போய்க் கிடக்கிறது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவது அரசாங்கத்தின் சேவைத் திட்டம். போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசாங்கம்தான் அதற்கான கட்டணத்தைக் கட்ட வேண்டும் அல்லது அதற்கான செலவை அரசின் வரவில் காட்ட வேண்டும்.

கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அதற்கான செலவுகளை அரசு பொறுப்பேற்றுக் கொள்ளும் என்று சொன்னார். அரசு உத்தரவும் 8.5.90 அன்று வெளியிடப்பட்டது. அனால் இதுவரை போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒரு பைசா கூட வந்து சேரவில்லை. திண்டுக்கல் ராணி மங்கம்மாள் அரசு போக்குவரத்தில் மாணவர்களுக்கு இலவச பஸ் பஸ் வழங்கியதில் சுமார் ஒரு கோடியே பதினேழு லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு உத்தரவுப்படியே இந்த அரசாங்கம் நடந்து கொள்ளாததால் பல லட்சங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

மேலும் அதிகாரிகள் மட்டத்திலும் அரசியல்வாதிகள் மட்டத்திலும் ஊழல் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.

எடுப்பதை எல்லாம் அரசாங்கம் எடுத்துக் கொண்டு, உண்மைகளை மறைத்ததால்தான் இந்த பஸ் கட்டணம் ஏற்றப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு சமர்பிக்கப்பட்ட முழுமையான வரவு-செலவு கணக்கை தொழிற் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கேட்டும், இது வரையில் அனைத்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் மௌனிகளாகவே இருக்கின்றனர்.

"மற்ற மாநிலங்களைப் பாருங்கள் அங்கே பஸ் கட்டணம் அதிகம்.தமிழ் நாட்டில்தான் குறைவு. எனவே பஸ் கட்டண உயர்வு நியாயம்தான்" என்று நமது அமைச்சர்கள் பேசுகிறார்கள். இதன் நியாயம் அறிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சம்மேளன பொதுச்செயலாளர் எ.சௌந்தரராஜனை அணுகி விளக்கம் கேட்டோம். அவர், ‘‘இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பஸ் கட்டணம் குறைவு என்று இவர்கள் பொய் சொல்கிறார்கள். இதைவிட மேற்குவங்கத்தில் பஸ் கட்டணம் குறைவு. இந்த அமைச்சர்கள் எதற்கெடுத்தாலும் கேரளாவைப் பாருங்கள், மகாராஷ்டிராவைப் பாருங்கள் என்று சொல்கிறார்கள். உண்மையில் அங்கே ஒரு ‘ஸ்டேஜ்’ என்பது நான்கு கிலோமீட்டர் தூரம். அதற்கு எழுபது பைசா வாங்குகிறார்கள். நம்மிடம் அமைச்சர்கள், ‘அங்கே எழுபது பைசா இங்கே ஐம்பது பைசா’ என்று சொன்னார்களே தவிர அங்கே ஒரு ஸ்டேஜ் நான்கு கிலோ மீட்டர். இங்கே ஒரு ஸ்டேஜ் ஒன்னரைக் கிலோ மீட்டர்’ என்பதை மக்களிடம் மறைத்து விட்டார்கள்.

மற்ற மாநிலங்களில் பஸ்கள் ஒரு லிட்டர் டீசலுக்கு மூன்றரைக் கிலோமீட்டர் தூரம்தான் ஓடுகிறது. ஆனால் இங்கு நாலேமுக்கால் கிலோமீட்டர் தூரம் ஓட்டுகிறோம். வேறு மாநிலங்களில் ஒரு பஸ் ஒரு நாளைக்கு இருநூற்றி நாற்பது கிலோமீட்டர் தூரம்தான் ஓடுகிறது. இங்கு முன்னூற்றி நாற்பது கிலோமீட்டர் தூரம் ஓட்டிக் காட்டுகிறோம்.வெளி மாநிலங்களில் ஒரு பஸ்ஸில் 8௦௦ பயணிகள்தான் பயணம் செய்கிறார்கள். ஆனால் இங்கு ஒரு நாளைக்கு ஆயிரத்து நானூறு பயணிகள் புண்ணாக்கு மூட்டையைப் போல பயணம் செய்கிறார்கள்.

இவ்வளவு லாபத்தை போக்குவரத்துக் கழகங்கள் பெற்றுத் தந்தும் அமைச்சர்கள் ஐயோ நஷ்டம் வந்து விட்டதே என்கிறார்கள். உண்மையில் தமிழ்நாட்டில் பல்லவனைத் தவிர வேறு எந்தக் கழகத்துக்கும் நஷ்டமில்லை. ஆனால் தமிழ்நாடு முழுவதும் நஷ்டம் என்று சொல்லி பஸ் கட்டணத்தை ஏற்றினார்கள். இவர்கள் நஷ்டம் என்று சொல்வது சுத்தப்பொய். பித்தலாட்டம். மக்களை ஏமாற்றுகிறார்கள்.மக்களின் நலன் மீது எந்த அக்கறையும் அவர்களுக்கு இல்லை. உலக வங்கியின் நிர்பந்தத்தாலும் தேர்தலின்போது தனியார் பஸ் முதலாளிகளிடம் வாங்கிய நன்கொடைக்கு காணிக்கை செலுத்துவதற்கும் அப்பாவி மக்களைப் பழிவாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்’’ என்று விளக்கினார் சௌந்தரராஜன்.

இது வேண்டுகோள் அல்ல எச்சரிக்கை!

சென்னை மதுரை திருச்சி போன்ற இடங்களில் போலீசார் தடியடி நடத்தி மாணவர்களைக் கலைத்துள்ளனர். மாணவர்களின் போராட்டத்தை தலைமையேற்று நடத்தும் இந்திய மாணவர் சங்கத்தின் ராம்கியைச் சந்தித்தோம்.

அவர் பேசும் போது, ‘‘ஒரு விஷயம் சரின்னு பட்டால் உடனடியாக ஆதரவுனு சொல்றதும் தப்புன்னு தெரிஞ்சா உடனே எதிர்ப்பு தெரிவிக்கிறதும் மாணவர்களோட குணாதிசயம். அரசோட குறைகளைச் சுட்டிக்காட்டி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செஞ்சா மாணவ சங்கத்தையே எதிரியாக நினைக்குறாங்க. சென்னையிலும் மதுரையிலும் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் மீது லத்திசார்ஜ் செஞ்சு போலீசார் மிருகத்தனமா நடந்துருக்காங்க. சில மாணவர்கள் மேல் கேஸ் போடப்பட்டுருக்கு. அது மட்டுமில்லாம ஆர்ப்பாட்டம் செஞ்ச மாணவர்கள் மீது சில அ.தி.மு.க. காரங்க தாக்கியிருக்காங்க. இந்த வக்கிரமான அரசியலின் விளைவு படு பயங்கரமா இருக்கும்னு சில அரசியல்வாதிகளுக்கு தெரியல.

கல்லூரிகளை விட்டு வெளியேறி இப்போது மக்களோட பிரச்னைகளுக்காக தெருவிற்கு வந்திருக்கோம். தயவு செய்து மாணவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். இது வேண்டுகோள் அல்ல.எச்சரிக்கை. ஏனென்றால் அடக்குமுறைக்கும் அதிகார வெறிக்கும் பதில் கொடுப்பதற்கு எங்களுக்கு நன்றாகவே தெரியும்’’ என்றார் கனல் பறக்கும் வார்த்தைகளால்.

தேர்தலில் வாங்கினதுக்கு கைமாறு! - டாக்டர் ராமதாஸ்.

பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டில்லி மாநாட்டுக்கு புறப்படும் அவசரத்தில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிரான தனது கண்டனப் பேட்டியைத் தந்தார்.

‘‘வளைகுடாப் போர் நடந்துகிட்டு இருக்கும் போது கூட பஸ்கட்டணம் ஏறல. டீசல் விலையெல்லாம் பெரிய அளவுக்கு உயர்ந்தப்பக்கூட பஸ் கட்டணம் உயரல. ஆனா எதுவுமே இல்லாதபோது இப்ப பஸ்கட்டணம் ஏற்றி இருப்பது கேள்விக்குறியா இருக்கு. இதனால் தனியார் பஸ் முதலாளிகளுக்குத்தான் கொள்ளை லாபம். தேர்தல் சமயத்தில, தான் வாங்குனதுக்கு கைமாறாக பஸ் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது இந்த அரசு. இது வேதனையானது.

இந்த பஸ் கட்டண உயர்வால் இன்னிக்கு எத்தனையோ பொதுமக்கள் கால்நடையா நடந்து வர்றாங்க. ஆனா ஜெயலலிதா எரிகிற தீயில் எண்ணெய்யை ஊத்தியது மாதிரி ஆயிரம் கார்களோட உல்லாச பவனி வர்றாங்க. ஜெயலலிதா அரசாங்கம் 300 கோடி ரூபாயை திடீர்னு உயத்திருக்கு. இது பாமர ஏழை நடுத்தர மக்களைக் கடுமையாக பாதிச்சுருக்கு.

வருகிற இருபத்தியெட்டாம் தேதி வரைக்கும் பஸ் கட்டணத்தைக் குறைக்க டயம் கொடுத்திருக்கோம். அப்படியும் எந்த சாதகமான பதிலும் இல்லைனா நாங்க தீவிரமான பஸ் மறியல்ல இறங்குவோம். அது எப்படி இருக்கும்னு இன்றைய ஆட்சியாளர்களுக்கு நல்லாவே தெரியும்’’ என்ற எச்சரிக்கை வார்த்தைகளை வீசிவிட்டுப் புறப்பட்டார்.

தி.மு.க. தலைமை நிலைய செய்தித் தொடர்பாளர் ஆலடி அருணா, "அரசாங்கத்தில் நடக்கும் ஊழலையும் மேல்மட்டத்தில் கைமாறும் கமிசனையும் ஒழித்தாலே போதும் நஷ்டத்தை சரிக்கட்டி விடலாம். திமுக ஆட்சிக் காலத்தில் ஆம்னி பஸ்களின் ஒரு இருக்கைக்கு இரண்டாயிரம் ரூபாய் வரி விதித்திருந்தோம். ஒரு இருக்கைக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரி வசூலிக்கலாம் என்று உயர் நீதி மன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் அ.தி.மு.க. அரசு பதவி ஏற்றவுடன் இரண்டாயிரத்தை ஐநூறாகக் குறைத்தார்கள். மேலும் அவர்களிடம் இருந்து தி.மு.க. அரசால் வசூலிக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாயை அவர்களுக்கே திருப்பிக் கொடுத்து விட்டது இந்த அரசாங்கம்.

தனியார் பஸ் முதலாளிகளுக்கு இவ்வளவு சாதகமாக அ.தி.மு.க. அரசு நடந்து கொள்வதன் இரகசியம் என்ன? அங்கே பேரம் நடந்துள்ளது.பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. தற்போதைய பஸ் கட்டண உயர்வை திரைமறைவில் தூண்டியதே பஸ் முதலாளிகள்தானே. அதற்காக பலகோடி ரூபாய்கள் பஸ் முதலாளிகள் கொடுத்துள்ளனர். அது மட்டுமன்றி தமிழகம் முழுவதும் தனியார் பஸ்களுக்கு மட்டுமே கால அட்டவணையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது தனியார் பஸ் போகும் நேரத்தில்தான் பயணிகள் அதிகமாக இருப்பார்கள். இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இருந்தாலும் அ.தி.மு.க. அரசு தனது தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளட்டும்.

வெள்ளைக் கோட்டு போட்டவங்கனா பெரிய வெங்காயமாடா?

பஸ் கட்டண உயர்வை எதிர்த்து மதுரை மாவட்ட மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். தியாகராஜா கல்லூரி, சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக செல்வதற்காக ஆங்காங்கே திரண்டனர். அவர்களை ஊர்வலமாகச் செல்லவிடாமல் போலீசார் தடுத்து காம்பவுண்டு கதவை இழுத்துப் பூட்டினர். அனுமதி இல்லாத மாணவர்கள் காம்பவுண்டுக்கு உள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் செல்வதற்கு கல்லூரியை விட்டு வெளியே வந்தனர். பாதுகாப்புக்கு நின்ற ஏ.சி. சிவனாண்டி மாணவர்கள் ஊர்வலமாகச் செல்லவிடாமல் தடுத்தார்.

மாணவர்கள் சிவனாண்டியிடம், ‘‘நாங்கள் ஏன் ஊர்வலமாகச் செல்லக் கூடாது? பொதுமக்கள் பிரச்சனைக்காகத்தான் போராட்டத்தில் இறங்கியுள்ளோம். எந்த அசம்பாவிதமும் நடைபெறாது’’ என்றனர்.

‘‘144 தடைச் சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அனுமதி தர முடியாது’’ என்றார் ஏ.சி.சிவனாண்டி.

மாணவர்கள் மருத்துவக் கல்லூரி வளாகத்துக்குள் சென்று எதிர்ப்புக் கோஷங்கள் போட்டுக் கொண்டே தரையில் அமர்ந்தனர்.அப்போது இரண்டு மாணவர்களைப் பிடித்து போலீஸார் வேனில் ஏற்றிச் சென்றிருக்கிறார்கள்.

விஷயம் மாணவர்களுக்கு தெரிய வர கொந்தளித்து அருகில் உள்ள மதிச்சியம் போலீஸ் ஸ்டேஷன் (சி-1) சென்று விசாரிக்க சில மாணவர்கள் வெளியில்வர முற்பட்டனர்.

ஏ.சி.சிவனாண்டி தடுத்தார்.

இவர்கள் மாணவர்களைப் போலீஸ் வேனில் ஏற்றிச் சென்ற விவரத்தைக் கூறினர்.

‘‘அப்படி எல்லாம் நடக்கவில்லை. நடந்தாலும் வந்து சேர்வான்கள்’’ என்று திமிருடன் சிவனாண்டி சொன்னவுடன் மாணவர்களுக்கு மேலும் சந்தேகம் வந்து வாக்குவாதம் ஏற்பட்டது.

‘‘டேய் நாய்ங்களா..ஒழுங்கா காலேஜ் போங்க இல்லைனா தடியடி நடத்துவேன்’’ என்றார் சிவனாண்டி.

மாணவர்கள் காம்பவுண்டுக்குள் சென்று, ‘‘போலீஸ் அராஜகம் ஒழிக! ஏற்றாதே ஏற்றாதே பஸ் கட்டணத்தை ஏற்றாதே!’’ என்று கோஷம் போட்டு தரையில் அமர்ந்தனர்.

‘‘டேய் காலேஜ் கேட்டை இழுத்து பூட்டுங்க’’ என்று சிவனாண்டி உத்தரவு தந்தவுடன் போலீஸ் காம்பவுண்டுக்குள்ளே வந்து பூட்டிக் கொண்டனர்.

‘‘இரண்டு நிமிடத்தில் கலைந்து போங்க..இல்லைனா சார்ஜ் கொடுக்க வேண்டி வரும்’’ என்றார் சிவனாண்டி.

‘‘எங்க காம்பவுண்டுக்குள்ள நாங்க போராட்டம் நடத்த எங்களுக்கு உரிமையுண்டு, நீங்கதான் எங்க காம்பவுண்டை விட்டு வெளியே போகணும்’’ என்று ஒரு மாணவன் கூறினான்.

கடுப்பான சிவனாண்டி, ‘‘வெள்ளைக் கோட்டுப் போட்டவன்னா பெரிய வெங்க்காயமாடா?’’ என்று கேட்டுக் கொண்டே லத்தியைச் சுழற்றி மாணவர்களைத் தாக்க ஆரம்பித்தார். ஏ.சி. கம்புசுத்த ஆரம்பித்தபின் மற்ற போலீஸ் விடுமா?

‘‘தம்!டும்!ஐயோ!அப்பா! டேய் ரத்தம் வருது’’ என்று மாணவர்களின் அலறல்களைக் கேட்காமல் ராட்சசனாக மாறி ருத்ரதாண்டவம் போட்டது போலீஸ்.

மருத்துவம் கற்க வந்த மருத்துவர்களுக்கு மருத்துவம் செய்ய நேரிட்டது. போலீஸார் நடத்திய தடியடியால் ஐந்து பேர் ரத்தக் காயம் அடைந்தனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தடியடியின் போது நாலைந்து மாணவர்களின் மோதிரமும் செயினும் காணாமல் போனது. காணாமல் போன பொருள்களைத் தேடக்கூட மாணவர்களை அனுமதிக்க வில்லை போலீஸ்.

மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பயிற்சி டாக்டர்கள் 184 பேரும் பட்ட மேல்படிப்பு டாக்டர்கள் 15௦ பேரும் போராட்டத்தில் குதித்தனர். அப்போதும் அரசு செவிசாய்க்கவில்லை.

"மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குகிறோம் என்று சொல்லி தடியடி நடத்திய தல்லாகுளம் ஏ.சி. சிவனாண்டியை வேறு ஊருக்கு மாற்றுவதுடன் தற்காலிக சஸ்பென்ட் செய்ய வேண்டும், நடந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை செய்ய வேண்டும் இல்லையென்றால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்" என மாணவர்களுக்கு ஆதரவாக உதவி டாக்டர்கள் முடிவை எடுத்தனர். 24 மணி நேரம் அரசுக்கு கெடுவும் விதித்தனர்.

அந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததால் டாக்டர்கள் 35௦ பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். உதவி டாக்டர்களைத் தொடர்ந்து சர்ஜன்களும் போராட்டத்தில் குதித்தனர்.

டாக்டர்கள் வேலைக்கு வராத காரணத்தால் வார்டில் உள்ள நோயாளிகளுக்கு நர்சுகள், முதல்நாள் டாக்டர்கள் என்ன மாத்திரை மருந்துகள் கொடுத்தார்களோ அதையே திருப்பிக் கொடுத்தனர். மதுரை அரசு ஆஸ்பத்திரி ஸ்தம்பித்தது. நோயாளிகள் அவதிப்பட்டனர்.

அரசு, ‘‘போராட்டத்தை வாபஸ் வாங்குங்கள், நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்றது.

‘‘நடவடிக்கை எடுங்கள், வாபஸ் வாங்குகிறோம்’’ என்றனர் டாக்டர்கள்.

போராட்டம் இரண்டு நாட்கள் தொடர்ந்தது. மதுரை மாணவர்களுக்கு அதரவு தெரிவித்து தமிழகம் முழுக்க டாக்டர்கள் போராட்டத்தில் குதிப்போம் என்றனர்.

அமைச்சர் முத்துசாமி போனில், ‘‘மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துவார். தடியடி நடத்திய போலீஸ் கமிஷனரை லீவில் செல்ல அனுமதித்து இருப்பதாகவும் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள்" எனச் சொன்னார்.

‘‘இது குறித்து எந்த முடிவு எடுத்தாலும் பொதுக் குழு கூட்டத்தில்தான் எடுக்க முடியும் என்று கூறினேன்’’ என்றார் டாக்டர்கள் சங்கத் தலைவர் போஸ்.

கேம்பசுக்குள் வந்ததைத் தடுத்தோம். ‘‘ஏண்டா வெள்ளைக் கோட்டுப் போட்டா பெரிய வெங்காயமாடா? என்று சொல்லிக் கொண்டே சிவனாண்டி அடித்தார். முதல் அடி எனது மண்டையில் பட்டு உடைந்து ரத்தம் பீறிட்டது. வலதுகால், இடதுகாலில் அடித்து எலும்பை உடைத்தனர். ரத்தம் வந்ததைக் கூட பார்க்காமல் என்னைத் தூக்கி வேனில் போட்டு போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போனார்கள். ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்’’ என்றார் சாம் இளங்கோ.

‘‘சிவனாண்டியிடம் பலமுறை சொன்னோம். அமைதியான போராட்டம்தான். எங்கள் காம்பவுண்டுக்குள்தான் போராட்டம் என்றோம். கேட்காமல் மிருகத்தனமாக தாக்கினார். கல் எடுக்கவில்லை. கட்டை எடுக்கவில்லை. அப்படி எடுக்கக் கூடியவர்களும் நாங்கள் அல்ல. எங்களை ஏன் அப்படித் தாக்கினார்கள் என்று இதுநாள் வரை விடை கிடைக்கவில்லை’’ என்றார் ராமமூர்த்தி.

"இதற்குரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று கலெக்டரைப் பார்க்கச் சென்றோம். அங்கு டீன் இருந்தார். கலெக்டர் கிரிஜா எங்களிடம் 'நீங்க என்ன செய்தாலும் ஏ.சி.யை சஸ்பென்ட் செய்ய முடியாது, உங்கள் வழியை நீங்கள் பாருங்கள் எங்கள் வழியை நாங்கள் பார்ப்போம்' என்று டென்சனாகப் பேசிவிட்டு ரூமை விட்டு வெளியே போனார். சிறிது நேரம் கழித்து வந்து நீங்க எல்லாம் வெளியே போங்க! என்று கலெக்டர் பேசியதுதான் எங்களுக்குப் புரியல’’ என்றார் ஃபைனல் இயர் மாணவர் தாஸ்.

‘‘சிவனாண்டி மனைவி எங்கள் காலேஜ்லதான் படித்தார். அப்போ இவர் அவரைக் காதலிக்க காலேஜ் காம்பவுண்டுக்குள் வந்து போவாராம். அந்த நேரத்து ஸ்டூடண்டுகள் சிவனாண்டியை நையப்புடைத்து இருக்கிறார்கள். சிவனாண்டி ஆத்திரம் வந்தால் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நடந்து கொள்வார்.அப்படி ஏற்பட்ட விபத்துதான் இது’’ என்றார் ஒரு போலீஸ் அதிகாரி.

சிவனாண்டி போன வருடம் லா காலேஜ் மாணவர்கள் மீது தடியடி நடத்தி பிரச்சனையை உருவாக்கினார். இப்போது மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தி மாட்டிக் கொண்டார். அரசு தரப்பில் பலமுறை டாக்டர்கள், மாணவர்களிடம் பேசி போராட்டம் வாபஸ் பெறாததால் அவதிப்பட்டவர்கள் பொதுமக்கள்.

‘‘அநியாயத்தை அரவணைத்து நீதிக்கு தண்டனை தருவதன் மூலம் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் டாக்டர்கள் போராட்டத்தைத் தூண்டி விடுவதோ... போராட்டத்தைத் தவிர்த்து நல்ல தீர்வு காண்பதோ ஜெ கையில்தான்’’ என்று கட்டுரையை நாம் முடிக்க இருந்தோம்.

அதற்குள் அமைச்சர் முத்துசாமிக்கும் டாக்டர்களுக்கும் இடையில் ஐந்து மணிநேரப் பேச்சுவார்த்தையின் முடிவில் சிவனாண்டி சஸ்பென்ட் செய்யப்படாமல் சென்னைக்குத் தூக்கப்பட்டுள்ளார்.

மறுநாள் ‘ஜெ’ பஸ் கட்டண உயர்வைக் குறைப்போம் என்றதைக் கேட்டபோது மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. நமக்கு மட்டுமல்லாமல் ‘ஜெ’ வுக்கும்தான்.

டீன் வீரபாகு பேட்டி.

நக்கீரன்; போலீஸ் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களைத் தாக்கினார்களா?

டீன் ; எனக்குத் தெரியாது.

நக்கீரன்; ஏன் அப்ப போராட்டம்.?

பதில்; என்ன சார் சிக்கலான கேள்வி. போலீஸ் அடிச்சதா மாணவர்கள் சொன்னார்கள்.

நக்கீரன்; காம்பவுண்டுக்குள்தானே ரத்தம் கிடந்தது?

டீன்; ஆமாம்.

நக்கீரன்; அப்ப மாணவர்களை போலீஸ் அடித்தது உறுதியாகிறது அல்லவா?

டீன்; அப்படித்தான் நினைக்கிறேன்.

நக்கீரன்; போராட்டத்தில் நோயாளிகள் அவதிப்படுகிறார்களே?

டீன்; யார் சொன்னது? மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டாக்டர்கள் போராட்டத்தை சமாளித்து வருகிறோம்.

அப்போது சென்னையில் இருந்து போன் வந்தது.

சரி சார். போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் எல்லாம் சகஜ நிலையில்தான் இருக்கிறது என்று டீன் போனில் பேசியது நமக்கு சிரிப்பை வரவழைத்தது.

போட்டோ எடுக்க முற்பட்டபோது, ‘‘சாரி சார்! வேண்டாம்’’ என்று இரு கைகளையும் கூப்பினார்.

App exclusive bus College students
இதையும் படியுங்கள்
Subscribe