Advertisment

இப்படியும் ஒரு தலைவர்..! தமிழர்களைக் கவர்ந்த எளிய முதல்வரும், கம்யூனிஸ்ட் மாநாடும்...

1991 communist conference in chennai

1991 communist conference in chennai

1991 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஆகியவை அடுத்தடுத்து நடைபெற்றன. இதில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தது. அதேபோல, மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில்,மற்ற சில கட்சிகளின் ஆதரவோடு காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. பி.வி. நரசிம்ம ராவ் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார். அந்த காலகட்டத்தில் வளர்ந்து வந்த வலதுசாரி கட்சியான பாஜகவையும், ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியையும் இந்திய கம்யூனிஸ்ட்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். அப்படியோர் காலகட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாடு அரசியல் ரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இதில் கலந்துகொண்ட கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் நடத்தையும், எளிமையும் தமிழக மக்களை வெகுவாக கவர்ந்தது. இப்படியான இந்த கம்யூனிஸ்ட் மாநாடு குறித்தும், ஜோதிபாசு குறித்தும் 18.1.1992 நக்கீரன் இதழில் வெளியான கட்டுரை.

Advertisment

"மக்கள் போர் தொடங்கி விட்டது" - சி.பி.எம்.

இந்திய அரசியல் வட்டாரமே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு இந்திய கம்யூனிச வரலாற்றில் மறக்கமுடியாத ஒன்றாக இருக்கும் என்று எல்லோரும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருகின்றனர்.

Advertisment

1992 ஜனவரி மூன்றாம் தேதி தொடங்கிய மாநாடு ஒன்பதாம் தேதி முடியும் போது சென்னை நகரத்தையே கலக்குவதோடு மட்டுமில்லாமல் அ.தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் ஒரு எச்சரிக்கை பயத்தை ‘‘இனிமா’’வாகக் கொடுக்க திட்டமிட்டிருக்கிறது சி.பி.எம். கட்சித் தலைமை.

கழகங்களின் கட்சி மாநாட்டை மட்டுமே பார்த்த நமக்கு, சி.பி.எம்.மின் இந்த மாநாட்டில் நேரில் கண்ட நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைத்தன.

மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு மாநாட்டில் சாதாரண தொண்டரைப் போல்தான் வலம் வருகிறார்.

அவரின் பாதுகாப்புக்காக தமிழக அரசு தனது விசேஷப் படையை அனுப்பியபோது ‘‘தேவையில்லை’’ என்று கூறிவிட்டார்.

மாநாட்டுக் கூட்டம் முடிந்தபோது தலைவர்கள் கூட்டத்துடன் கூட்டமாகவரிசையில் நின்று டீ வாங்கிக் கொள்வதும், காலியாக இருக்கும் பெஞ்ச்சை தேடிப் பிடித்து சாப்பிடுவதும் அந்தக் கட்சியின் புதிய தொண்டர்களைக் கூட ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஒருமுறை ஜோதிபாசு வெளியில் செல்வதற்காக மாநாட்டை விட்டு காரில் வெளியில் வரும் போது அருகில் இருந்த ஏ.வி.எம்.தியேட்டரில் படம் முடிந்து கூட்டம் ரோட்டை அடைத்து நின்றது. உடனடியாக அருகில் நின்ற போலீஸார் கூட்டத்தைக் கலைக்க ஓடினர். ஆனால், அதை ஜோதிபாசு தடுத்து நிறுத்தி மக்கள் கடந்து செல்லும்வரை காத்திருந்து விட்டு பிறகு புறப்பட்டார்.

ஜோதிபாசு சென்னை வருவதற்கு முன்பிருந்தே ஜெயலலிதா அவரை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் பாசு, ‘‘நேரமில்லைஇன்னொரு முறை வரும் போது சந்திக்கலாம்’’ என்று கூறி விட்டார்.

‘‘இல்லை! கட்டாயம் வர வேண்டும்..இல்லையென்றால் நான் அங்கு வந்து உங்களை சந்திக்கிறேன்’’ என்று ஜெயலலிதா சொன்னதும் உடனடியாகப் புறப்பட்டு போயஸ் தோட்டம் சென்று ‘ஜெ’வை சந்தித்தார் பாசு.

அந்த சந்திப்பின் போது, ‘‘உங்களைப் போன்று திறமையாக ஆட்சி நடத்த ஆலோசனை கூறுங்கள் என்று ‘ஜெ’ கேட்க, நீங்கள் காங்கிரஸ் காரர்களையும், பி.ஜே.பி.க்காரர்களையும் நம்பியிருக்கும்போது எப்படி நல்ல ஆட்சி நடத்த முடியும்’’என்று பாசு சொல்ல ‘ஜெ’ வேறு ஒரு பிரச்சனைக்கு தாவி விட்டாராம்.

கர்நாடகப் பிரச்சனையில் காங்கிரஸ், ஜனதாதளம் உட்பட அனைத்துக் கட்சிகளும் தங்களது மாநிலத்துக்கு மட்டும் வக்காலத்து வாங்கிக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால், இந்த மாநாட்டில் கர்நாடகம், தமிழகம் இரண்டு மாநில கம்யூனிஸ்ட் தலைவர்களும் சேர்ந்து ‘‘இத்தனைக் கொடூரங்களுக்கும் காரணம் பங்காரப்பாவும் (கர்நாடக முதல்வர்) மத்திய மைனாரிட்டி அரசும்தான்’’ என்று தீர்மானம் இயற்றி வெளியிட்டனர்.

இத்தனை நாட்களாக காங்கிரஸ் அரசை எதிர்த்து ஏன் தீவிரமாக தெருவில் இறங்கவில்லை என கட்சித் தலைமையை ஏகபோகமாகத் தாக்கினார்கள் மாநாட்டுப் பிரதிநிதிகள்.

கியூபா,சீனா,கொரியாவில் இருந்து வந்திருந்த கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள்ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அந்தந்த நாட்டின் வளர்ச்சிப் போக்குகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

சென்னையில் உள்ள சேரிப் பகுதிகளைப் பார்த்தவுடன் ‘ஓ’வென்று அழுதே விட்டார் ஒரு வெளிநாட்டுப் பெண் பிரதிநிதி. நீங்கள் அப்பாவிகளுக்கு துரோகம் செய்கிறீர்கள் என்று அவர் தேம்பினார்.

ஜோதிபாசு, சுர்ஜித், இ.கே.நாயனார், திரிபுரா முன்னாள் முதல்வர் நிருபன் சக்கரவர்த்தி போன்ற முக்கியப் பெருந்தலைகளுக்கு தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தும் அதை அவர்கள் மறுத்துவிட்டு மாநாடு நடக்கும் இடத்திலேயே தங்கிவிட்டனர்.

‘‘மக்களை வென்றெடுக்கும் பணியில் ஜெயித்து விட்டோம். மக்கள் போர் தொடங்கி விட்டது. அ.தி.மு.க.காங்கிரஸ் மக்கள் விரோத ஆட்சியைத் தூக்கி எறியும் நேரம் வந்து விட்டது’’ என்கிறார் தமிழக தலைவர் ஏ.என்.நல்லசிவன்.

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

communist west bengal App exclusive
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe