எம்எல்ஏவாக தயார்: கட்சியினர் அணுகலாம்: திலகன்
மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து நீக்கப்பட்ட இயக்குனர் வினையன் இயக்கிய படத்தில் நடிகர் திலகன் நடித்தார். இதையடுத்து நடிகர் திலகன் கட்டுப்பாட்டை மீறியதாக நடிகர் சங்கம் அவர் மீது நடவடிக்கை எடுத்தது. இதைத்தொடர்ந்து மோகன்லாலுடன் நடிக்க இருந்த கிறிஸ்டியன் பிரதர்ஸ் படம் உள்பட பல்வேறு புதிய மலையாள படங்களில் இருந்தும் நடிகர் திலகனை பட தயாரிப்பு குழுவினர் நீக்கினர்.
இதனால் கொதிப்படைந்து போன நடிகர் திலகன் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை கூறினார். இதற்கு நடிகர் சங்கம் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் சரியான விளக்கம் எதுவும் அவர் அளிக்காததால் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட திலகன் புதிய பட வாய்ப்புகளை இழந்தார். இதனால் தொழில் மறுப்பு செயல்களில் ஈடுபட்டு தனது பிழைப்பை கெடுப்பதாக நடிகர் சங்க நிர்வாகிகள் மீது திருவனந்தபுரம் தொழிலாளர் நலத்துறை ஆணைத்திடம் திலகன் புகார் செய்தார்.
இதற்கிடையில் அலி அக்பர் என்பவர் தான் இயக்கும் புதுப்படமொன்றில் நடிக்க திலகனை ஒப்பந்தம் செய்துள்ளார். இதையடுத்து அந்த இயக்குனரின் கார் கல்வீசி தாக்கப்பட்டது. கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ்குமார் தூண்டுதலில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி திலகன் கூறியதாவது: கணேஷ்குமார் எனக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். கார் மீது நடந்த தாக்குதல் சம்பவம் அதை உறுதிபடுத்துகிறது. நான் அரசியல்வாதி இல்லை. ஆனாலும் சட்டசபை தேர்தலில் கணேஷ்குமாரை எதிர்த்து போட்டியிடுவேன். ஏதேனும் அரசியல் கட்சிகள் என்னை வேட்பாளராக நிறுத்த ஆசைப்பட்டாலும் அணுகலாம் என்றார்.