ராமேசுவரம் மீனவர்கள் படகுகளுடன் சிறைபிடிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 550-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை கடற்படையினர் 4 ரோந்து படகுகளில் அங்கு மின்னல் வேகத்தில் வந்தனர். அவர்களை கண்டதும் மீனவர்கள் தங்கள் படகுகளை தமிழகம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால் அதற்குள் 5 படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களை, எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறைபிடித்துச் சென்றனர்.
ராமேசுவரத்தை சேர்ந்த செல்லத்துரைக்கு சொந்தமான 2 படகுகளில் இருந்த சுப்பிரமணி(வயது45), முருகேசன், திருமுருகன், பாலமுருகன், முனியசாமி, முருகன், மாரி, பஞ்சவர்ணம், இன்னொரு பாலமுருகன் ஆகியோரும், முருகன் என்பவரின் படகில் இருந்த முத்துமாணிக்கம், அண்ணாமலை, குமார், நம்புராஜன், முருகன் ஆகியோரும், ஜஸ்டின் என்பவரின் படகில் இருந்த அந்தோணி சிலுவை, கருப்பையா, நசீர், கோவிந்தன் ஆகியோரும், மோட்சஅலங்காரம் என்பவரின் படகில் இருந்த ராஜபு, ஜுலியஸ், கிறிஸ்டோபர், எல்ரோம், நிவாசர் என மொத்தம் 23 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையினரிடம் சிக்காமல் ராமேசுவரத்திற்கு தப்பி வந்த மற்ற மீனவர்கள் மூலம் இந்த தகவல் தெரியவந்தது.
சிங்கள கடற்படையினர் அவர்களை இலங்கை தலைமன்னார் கடற்படை முகாம் கொண்டு சென்று ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை நடத்திவிட்டு, அவர்களை தலைமன்னார் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், இந்த மீனவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை. எனவே அவர்களை இன்று(திங்கட்கிழமை) மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். அதன்பின்னரே அந்த மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா? அல்லது அங்கு கைது செய்யப்படுவார்களா என்று தெரியவரும்.
இந்த நிலையில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் ராமேசுவரத்தில் நேற்று நடந்தது. அதில் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இறுதியில் மீனவர்கள் 23 பேரையும், 5 படகுகளையும் விடுவிக்கும் வரை வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.