போராட்டம் ஏன்?. சிறைகள் எல்லாம் காலியாக இருக்கிறது என்றா?. இல்லை. சிறை நிரப்புவது என்றால்...! கலைஞர் பேச்சு!

அதிமுக அரசை கண்டித்து வடசென்னை மாவட்ட திமுக சார்பில் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் 22.06.2012 அன்று பொதுக்கூட்டடம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் கலைஞர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில்,
எனக்கு பிடித்த மாநகரங்களில் ஒன்று சென்னை. அங்கு மிகவும் பிடித்த இடம் வடசென்னை. இங்குதான் தி.மு.க.வை அண்ணா தொடங்கினார். அவர் தொடங்கிய தி.மு.க., அவரது கொள்கை, லட்சியம் நம்மை இந்த காலமும் வழிநடத்துகிறது. அந்த அளவுக்கு ராசியான இடம் வடசென்னை.
திராவிட இயக்கத்தில் நான் 89 வயதையும், பேராசிரியர் அன்பழகன் 90 வயதையும் அடைந்து விட்டோம். இருவரும் 70 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இணை பிரியாமல் தொண்டாற்றி வருகிறோம். இந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது.
தி.மு.க. செயற்குழு கூட்டத்தை இன்று (22.06.2012)) கூட்டினோம். அதில், நீண்ட நெடிய தீர்மானத்தை நிறைவேற்றினோம். கழகத்தினரின் குமுறல்கள், வலியை ஆற்றிக்கொள்ள, அதற்கு மருந்தாக ஜுலை 4 ந் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்துள்ளோம்.
இந்த போராட்டம் ஏன்?. சிறைகள் எல்லாம் காலியாக இருக்கிறது என்றா?. இல்லை. சிறை நிரப்புவது என்றால் உண்மையான பொருள், தமிழ்நாடு, தமிழ் மக்கள், கலை, பண்பாடு, இலக்கியத்தை காப்பாற்ற, இங்கேயுள்ள அண்ணா நூலகத்தை காப்பாற்ற, அண்ணா பெயர் கொண்ட நினைவுச் சின்னங்களை காப்பாற்ற, அண்ணா, பெரியார் கொள்கைகள் நிலைத்து நிற்க நாம் செய்ய வேண்டிய தொண்டு நிறைய உள்ளது.
நம்முடைய போர் முறை அறப்போர் முறை. நாம் பெரியார், காந்தி வழியை பின்பற்றக் கூடியவர்கள். எதிரிக்கு ரத்த காயம், வன்முறை கொஞ்சமும் நடக்காத வண்ணம் பண்பாட்டை நாம் காப்பாற்ற வேண்டும். திருச்சி மாநாட்டிலே நான் கூறினேன். வன்முறையை தவிர்த்து வறுமையை ஒழிப்போம் என்று முழக்கம் எழுப்பினேன்.
இப்போது நாம் அறிவித்துள்ள போராட்டம் அறப்போராட்டம். ஆனால், நம்மை பிடிக்காத கட்சிக்காரர்கள், இந்த போராட்டம் வன்முறையை உருவாக்கும் என்பார்கள். வன்முறை வருவதை நாங்களே ஏற்க மாட்டோம். யாராவது வன்முறை கற்பிக்க முயன்றால் அவர்களை பிடித்து தருவோம்.
ஏன் ஜுலை 4ந் தேதி போராட்டம். எங்கள் பணி இந்த போராட்டத்துடன் முடியாது. எத்தனை நாட்கள் தொடரும் என்று தெரியாது.
இவ்வாறு தி.மு.க. தலைவர் பேசினார்.