தாங்கமுடியாத வெயில் கொடுமை:
ஒரே நாளில் 20 பேர் பலி

வெயிலின் கொடுமை தாங்கமுடியாமல் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பலர் இறக்கும் கொடுமையும் நேரிடுகிறது.
அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அதன்பிறகு நாளுக்கு நாள் வெயிலின் வேகம் அதிகரித்து வந்தது. கடந்த சில தினங்களாக அது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
ஆரம்பத்தில் 100 டிகிரியை தொட்ட வெயில் தற்போது சராசரியாக 104 டிகிரியை தாண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
சென்னையில் 9 நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. சில தினங்களுக்கு முன்பு சென்னையில் வெயில் அளவு 112 டிகிரியை தொட்டது. இதுகடந்த 4 ஆண்டுகளில் இதேநாளில பதிவான வெயிலைவிட மிகவும் அதிகம்.
சென்னையில் தொடர்ந்து 104 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த வருடம் மே மாதம் இதே நாட்களில் அதிக அளவு வெயில் 107.06 டிகிரியாக இருந்தது. இந்த ஆண்டு நேற்று 107.60 டிகிரி வெயில் அடித்தது. இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
அக்னி வெயில் முடிவடைய இன்னும் 2 நாட்கள் இருக்கிறது. அதன்பிறகும் சில தினங்கள் வெயிலின் வேகம் இருக்கும்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்பிறகு வெயிலின் அளவு படிப் படியாக குறையும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆந்திராவில் கொளுத்தி எடுக்கும் கடுமையான வெயிலால் வாரங்கல் மாவட்டத்தில் ஏழு பேர், அதிலாபாத் மாவட்டத்தில் 3 பேர், கம்மம் மாவட்டத்தில் 3பேர், விஜயவாடா டவுன் பகுதிக்குள் 3 பேர், கரீம் நகர் மாவட்டத்தில் 2 பேர், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 2 பேர் என மொத்தம், 20 பேர் வெயில் கொடுமைக்கு நேற்று பலியாகினர்.
ஆந்திராவில் கம்மம் மாவட்டம், கொத்த கூடம் நகரில் அதிகபட்சமாக, 51 டிகிரி பதிவானது.
மசூலிப்பட்டினம், 47 டிகிரி, நந்திகாமா, 45, கன்னவரம், 45, நரசாபுரம், ஓங்கோல், 44, காவலி, 42, விசாகப்பட்டனம், காகிக்நாடா, 41, துனி, நெல்லூர் நகரங்களில் குறைந்தபட்ச அளவு, 40 டிகிரி வெப்பம் பதிவானதாகவும், ஞாயிறு வரை வெயிலின் பாதிப்பு இருக்கும் என, ஐதராபாத் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.