அதிக மது குடிப்பது யார்?: நண்பர்களின் விபரீத போட்டி உயிரை பறித்தது
ஈரோடு மாவட்டம், பவானி சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (24), மினி ஆட்டோ டிரைவர். இதே பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (26), ஆம்புலன்சு டிரைவர். இவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள்.
இவர்கள் 2 பேரும் நேற்று காலை 11 மணி அளவில் பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர். அங்கு மதுபானத்தை வாங்கிவிட்டு பாரில் உட்கார்ந்து மதுவை குடிக்க தொடங்கினார்கள்.
அப்போது அவர்களுக்கு இடையே யார் அதிக அளவு யார் மதுபானத்தை குடிக்கிறார்கள் என்ற போட்டி ஏற்பட்டது.
உடனே அவர்கள் பாரில் உட்கார்ந்து கொண்டு, மதுபானத்தை வாங்கி தொடர்ந்து குடித்துக்கொண்டே இருந்தனர். மதுபோதையில் இருந்த அவர்களுக்கு எவ்வளவு நேரம் மதுவை குடித்துக்கொண்டு இருக்கிறோம் என்றுகூட தெரியவில்லை. இதனால் நேரம் சென்றுகொண்டே இருந்தது.
நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த போட்டி மாலை 5.30 மணி வரை நீடித்தது. இந்த நிலையில் போதையின் உச்சத்தில் இருந்த ஆனந்தன் பாரில் உட்கார்ந்த இடத்திலேயே மயங்கி கீழே சாய்ந்தார். அதைத் தொடர்ந்து பாலமுருகனும் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார்.
மாலை 6.15 மணியளவில் போதை மயக்கத்தில் தரையில் விழுந்து கிடந்த ஆனந்தனுக்கு திடீரென்று வலிப்பு வந்தது போல் கைகால் இழுத்துக்கொண்டிருந்தது. ஏதோ ஒரு விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்த பாரில் இருந்த குடிமகன்கள் ஆனந்தனையும், அருகில் சுருண்டு கிடந்த பாலமுருகனையும் மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஆனந்தனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
பாலமுருகனுக்கு அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.