டெல்லியில் முதல் மந்திரிகள் மாநாடு
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது பற்றி ஆலோசிப்பதற்காக, டெல்லியில் இன்று முதல் மந்திரிகள் மாநாடு நடைபெறுகிறது.
தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு, மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை என்று கூறி, தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மாநில முதல் மந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கூட்டணி முதல் மந்திரியான மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜியும் இந்த முடிவை எதிர்த்து வருகிறார்.
இதனால், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்த மத்திய அரசு, அது குறித்து மாநில முதல் மந்திரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தப்படும் என்று அறிவித்தது. அதன்படி, இன்று (சனிக்கிழமை) மாநில முதல் மந்திரிகளின் மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது.