கடத்தப்பட்ட கலெக்டர் விடுதலை ஆகிறார்! அழைத்து வர தூதர்கள் வனப்பகுதிக்கு பயணம்!
சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்ட கலெக்டராக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன் கடந்த மாதம் 21ந் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டுமானால் சிறையில் இருக்கும் தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த 17 பேரை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை அவர்கள் விதித்தனர்.
இதுதொடர்பாக மாவோயிஸ்டுகளின் தூதர்களான பி.டி.சர்மா, ஹர்கோபால் ஆகியோருக்கும் அரசு தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற 4வது சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. சத்தீஷ்கார் மாநில சிறைகளில் உள்ள பழங்குடியின கைதிகள் மீதான வழக்குகளை ஆய்வு செய்ய அரசு தரப்பு பிரதிநிதி நிர்மலா பச் தலைமையில் உயர் அதிகார குழு ஒன்றை அமைக்க அப்போது அரசு ஒப்புக்கொண்டது.
இதைத்தொடர்ந்து, கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனை 3ந் தேதி (இன்று) பொதுமக்கள் முன்னிலையில் விடுவிக்கப்போவதாக நேற்று முன்தினம் மாவோயிஸ்டுகள் அறிவித்தனர். அதன்படி அலெக்ஸ் பால்மேனன், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த தட்மெட்லா வனப்பகுதியில் இன்று விடுதலை செய்யப்படுகிறார்.
அவரை அழைத்து வருவதற்காக மாவோயிஸ்டுகளின் தூதர்களான பி.டி.சர்மாவும் ஹர்கோபாலும் இன்று காலை தட்மெட்லா வனப்பகுதிக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.
மாவோயிஸ்டுகளிடம் இருந்து தகவல் வந்து இருப்பதாகவும், எனவே கலெக்டரை அழைத்து வருவதற்காக இன்று காலை தட்மெட்லாவுக்கு செல்ல இருப்பதாகவும் பி.டி.சர்மா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். சில பிரச்சினைகளை அரசு புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்படும் என்று நம்புவதாகவும் அப்போது அவர் கூறினார்.
ஹர்கோபால் கூறுகையில்; கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் விடுதலை செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில்தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக நடவடிக்கைகளை தொடங்கும் என்று நம்புவதாக தெரிவித்தார்.