நடிகர் தனுஷ் மீது ஐதராபாத் போலீசில் புகார் ஐதராபாத்தைச் சேர்ந்த என்.கே. தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன உரிமையாளர் நாட்டிகுமார், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், கஸ்தூரி ராஜா, அவரது மகள் விமல கீதா, சோனி மியூசிக் நிறுவனம், ஆர்.கே. புரடெக்ஷன்ஸ் ஆகியோர் மீது எஸ்.ஆர். நகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள புகார் மனுவில், ‘’ஆர்.கே. புரடெக்ஷன்ஸ் 3 படத்தை தயாரித்தது. இதில் தனுஷ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்து இருந்தனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் தமிழில் தயாரிக்கப்பட்டது.
30.3.2012 அன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடும் உரிமையை எங்கள் நிறுவனம் பெற்றது. இதற்கான ஒப்பந்தம் 21.3.2012 அன்று கையெழுத்தானது.
ஆனால், எங்களுக்கு தெரியாமலேயே ஆர்.கே. புர டெக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு வேண்டிய நிறுவனமான உண்டார் பிலிம்ஸ் நிறுவனம், 3 படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனத்துக்கு விற்றுள்ளது. அந்த நிறுவனம் 3 பட ஆடியோ சிடிக்களை தயாரித்து சந்தையில் விற்பனைக்கு விட்டுள்ளது.
விசாரித்ததில் சோனி மியூசிக் நிறுவனம் ஆர்.கே. புராடக்ஷன்ஸ் மற்றும், உண்டர்பார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து இந்த உரிமையை பெற்றுள்ளது தெரிய வந்தது.
மேற்கண்ட இரண்டு நிறுவனங்களும் எங்களை ஏமாற்றி சோனி நிறுவனத்துக்கு விற்றிருக்கிறது. நம்பிக்கை துரோகம் மோசடி மூலம் எங்கள் நிறுவனத்துக்கு ரூ.7 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக 3 பட ஆடியோ உரிமையை வேறொரு நிறுவனத்துக்கு மாற்றிக் கொடுத்ததன் மூலம் மேற்கண்ட நிறுவனங்களின் இயக்குனர்கள் லாபம் அடைந்துள்ளனர்.
எனவே, மேற்கண்டவர்கள் அனைவரின் மீதும் வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுத்து நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.