வாகனத்தில் அடிபட்டு இறந்த நாய்க் குட்டியின் அருகே பாசப் போராட்டம் நடத்திய நாய்
பழனியில் வாகனத்தில் அடிபட்டு இறந்த நாய்க் குட்டியின் உடல் அருகே பெண் நாய் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்து நடத்திய பாசப் போராட்டம் எல்லோ ரது மனதையும் உருக வைத்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் புதுதாராபுரம் ரோட்டில் உள்ள ராம கிருஷ்ணா விடுதி அருகே 28.04.2012 அன்று காலை சுமார் 6 மணிக்கு ஒரு பெண் நாய் தனது சிறிய குட்டியுடன் வந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் தாயுடன் வந்த நாய்க்குட்டி மீது மோதியது. இதில் நாய்க்குட்டி உடல் நசுங்கி இறந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத் தால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் நாய் இறந்து போன நாய்க்குட்டி அருகே சோகமே உருவாக கண்ணீர் மல்க அமர்ந்தது. மேலும் யாரும் நாய்க்குட்டியை நெருங்க விடாமல் குரைத்துக் கொண்டே இருந்தது.
அதிகாலையில் நடை பயிற்சிக்கு சென்றவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பாசப் போராட்டத்தைக் கண்டு மனம் உருகினர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெண் நாய் அந்த இடத்தை விட்டு சிறிது கூட அகலாமல் அமர்ந்து இருந்தது. அப்பகுதியை கடந்து சென்ற பொதுமக்கள் ஐந்தறிவு கொண்ட ஒரு விலங்கு தனது குட்டியின் மீது வைத்திருந்த பாசத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்து பேசியபடி சென்றனர்.
பின்னர் காலை சுமார் 9 மணி அளவில் நகராட்சி சுகாதார பணியாளர்கள் இறந்து போன நாய்க்குட்டியை அப்புறப்படுத்தினர். இதன் பிறகும் அந்த இடத்தை விட்டு செல்ல மனமில்லாமல் பெண் நாய் அங்கேயே வட்டமடித்தபடி இருந்தது. பல மணி நேரங்களுக்குப் பிறகுதான் அந்த இடத்தை விட்டு பெண் நாய் சென்றது.