புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியில்லை: திருமாவளவன்

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது என்று தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தை கட்சியின் தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கான புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு குறித்து, சென்னையை அடுத்த மறைமலைநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் (28/04/2012) காலை நேர்காணல் நடந்தது.
கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். 8 மாவட்டங்களில் இருந்து வந்திருந்த நிர்வாகிகளிடம் முதலில் கூட்டாக ஆலோசனை செய்தார். பின்னர் தனித்தனியாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மாவட்ட செயலாளர் பதவிக்கு விருப்ப மனுக்கள் செய்து இருந்த நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தினார்.
புதிய நிர்வாகிகள்
கூட்டம் முடிந்ததும், மாலையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வருகின்ற 30 ந் தேதி சேலத்திலும், 1 ந் தேதி திருச்சியிலும், 2 ந் தேதி புதுவையிலும், 5 ந் தேதி மதுரையிலும் நேர்காணல் நடைபெற உள்ளது. இந்த நேர்காணல் முடிந்தவுடன் மே 2 வது வாரத்தில் புதிய நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்படும்.
கலெக்டரை மீட்க பிரதமரை வலியுறுத்த வேண்டும்
சத்தீஷ்கார் மாநிலம், சுக்மா மாவட்ட கலெக்டர், தமிழகத்தை சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன் கடத்தப்பட்டு உள்ளார். அவரை இன்னும் மீட்க முடியவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியதாகும். தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில், அவரை மீட்க மாநில அரசு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியில்லை
புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது. யாருக்கு ஆதரவு என்பதை கட்சி பின்னர் முடிவு செய்யும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார். பேட்டியின் போது மாநில நிர்வாகிகள் சிந்தனை செல்வன், முகமது ழூசுப், பாவரசு, கவுதம் சன்னா, மாவட்ட செயலாளர் விடுதலைச்செழியன், துணை செயலாளர் தென்னவன் உள்பட பலர் உடன் இருந்தனர்.