தியாகி சங்கரலிங்கனாருக்கு மணிமண்டபம்!
தியாகி சங்கரலிங்கனாருக்கு விருதுநகரில் விரைவில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் புதன்கிழமை அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் வி. பொன்னுபாண்டியின் (ஸ்ரீவில் லிபுத்தூர்) கேள்விக்கு முதல்வர் ஜெயலலிதா,
’’தமிழ்நாடு என்று இந்த மாநிலத்துக்கு பெயர் மாறுவதற்கு காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனாருக்கு அவரது சொந்த ஊரான விருதுநகரிலேயே மணிமண்டபம் கட்டப்படும்’’ என்றார்.
சங்கரலிங்கனார்: சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்பட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் 1956 ஜூலை 27 முதல் அக்டோபர் 10 வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர் துறந்தவர் தியாகி சங்கரலிங்கனார். அவரின் கோரிக்கை 1968 நவம்பர் 23-ம் தேதியில்தான் நிறைவேறியது. தமிழகத்தில் அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
சங்கரலிங்கனாருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று அறிவித்து உள்ளதுபோல தியாகி தீரன் சின்னமலைக்கு சங்ககிரியில் அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் 8-ம் தேதி அறிவித்தது நினைவுகூரத்தக்கது.