இடைத்தேர்தலில் போட்டி முடிவை மறுபரிசீலனை செய்க: ஜெ.வுக்கு இ.கம்யூ. வேண்டுகோள்
புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் த. இந்திரஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர் முத்துக்குமரனின் உருவப்படத்திறப்பு விழா மற்றும் குடும்ப நல நிதியளிப்பு விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் த. இந்திரஜித் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சாலை விபத்தில் உயிரிழந்த புதுக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. முத்துக்குமரனின் படதிறப்பு மற்றும் அவரது குடும்பத்துக்கு நலநிதி வழங்கும் விழா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இம்மாதம் 28ம் தேதி நடைபெற உள்ளது.
முத்துகுமரனின் மரணம் கட்சிக்கு பேரிழப்பாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்பதைவிட அனைத்து தரப்பு மக்களின் அன்பைப் பெற்ற சட்டப்பேரவை உறுப்பினராகவே பணியாற்றினார். அதனால்தான் புதுக்கோட்டை மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
தற்பேர்து அறிவிக்கப்பட்ட இடைதேர்தலில் அதிமுக வேட்பாளரை கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பரிசீலனை செய்ய கால அவகாசம் உள்ளது.
மேலும் புதுக்கோட்டை தொகுதியில் முத்துகுமரன் மறைவிற்கு பிறகு இந்த இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குதான் ஒதுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எண்ணமாக உளளது. அதை எங்கள் கட்சியும் பிரதிபலிக்கிறது. எனவே இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
அவரது முடிவு எப்படி அமைந்தாலும், புதுக்கோட்டையில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் கட்சி எடுக்கும் நிலை குறித்த மாநில நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. அதில் புதுக்கோட்டை இடைத்தேர்தல் குறித்து கட்சியின் திடமான அரசியல் முடிவு எடுக்கப்படும். அதன் அடிப்படையில், புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை மாநிலச் செயலர் தா.பாண்டியன் அறிவிப்பார் என்றார்.