கோயில் விழாவில் போலீசார் மீது தாக்குதல் குளித்தலை அருகே கோயில் விழாவில் போதையில் ரகளை செய்த வாலிபர்கள் திடீரென போலீசாரை தாக்கினர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஈச்சம்பட்டியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி 23.04.2012 அன்று இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி(29), எலக்ட்ரிஷியன் கோபி(24) ஆகிய இருவரும் குடித்து விட்டு பெண்களை கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.
பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த குளித்தலை போலீசார் சக்திவேல், செல்வம், லோகு ஆகியோர் வாலிபர்கள் இருவரையும் எச்சரித்து அங்கிருந்து செல்லும்படி கூறினர்.
ஆனால் அவர்கள் இருவரும் அங்கிருந்து செல்லாமல் மேலும் ரகளையில் ஈடுபட்டனர். இதில் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். திடீரென அவர்கள் இருவரும் போலீசாரை கடுமையாக தாக்கினர். இதில் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக குளித்தலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.இது தொடர்பாக போலீசார் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை இன்ஸ்பெக்டர் முத்தரசு, பயிற்சி எஸ்.ஐ. செல்வராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்தனர். தலைமறைவான மூர்த்தியை தேடி வருகிறார்கள்.
கோயில் விழாவில் போலீசார் மீது நடத்திய தாக்குதல் சம்பவம் குளித்தலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.