எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 4ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சமச்சீர் கல்வி திட்டத்தில் நடைபெறும் முதல் தேர்வாகும். 16.04.2012 அன்று கணிததேர்வு நடைபெற்றது. கணித தேர்வில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகள் 100க்கு 100 மார்க் பெறுவார்கள்.
ஆனால் கணித தேர்வில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தேர்வு முடிந்து வெளியே வந்த சென்னை ஆசான் மெமோரியல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூறியதாவது:
கணித தேர்வில் பகுதி 1ல் அனைத்தும் ஒரு மார்க் கேள்விகள் ஆகும். இதில் வினா எண் 3, 5, 7, 9, 10 ஆகிய கேள்விகள் புத்தகத்தில் இல்லை. அதனால் அந்த கேள்விகள் அனைத்தும் கடினமாக இருந்தன. பகுதி 2ல் உள்ள கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் தலா 2 மதிப்பெண் உண்டு. அதில் 30 வது கேள்வியில் ஏ, பி ஆகிய இரு கேள்விகளும் கடினமாக இருந்தது.
மேலும் பகுதி 3ல் உள்ள கேள்விக்கு 5 மதிப்பெண்கள் ஆகும். இதில் 45 வது கேள்வி மிகவும் கஷ்டமாக இருந்தது. இது தான் மிகவும் சிரமமாக கேட்கப்பட்ட கேள்விகளாகும்.100 க்கு 100 மார்க் எடுப்பது சிரமம். இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.
கணித ஆசிரியர் ஒருவர் கூறுகையில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கணிதத்தில் வினாக்கள் சற்று கடினமாகத்தான் கேட்கப்பட்டுள்ளது. எனவே இந்த வருடம் 100 க்கு 100 மார்க் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் என்றார்.
இதுவரை காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு மற்றும் ரிவிஷன் தேர்வுகளில் 100க்கு 100 மார்க் எடுத்த மாணவர்கள் கூட இந்த தேர்வில் கண்டிப்பாக 100 மார்க் வராது என்று வருத்தப்பட்டனர்.