ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை 8 ஆயிரம் பேர் எழுதினார்கள்
தமிழ்நாட்டில் 6 மையங்களில் நேற்று நடந்த ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை 8 ஆயிரம் பேர் எழுதினார்கள்.
சென்னை உள்பட இந்தியா முழுவதும் 15 இடங்களில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி.) உள்ளது. இந்த நிறுவனத்தில் பி.டெக் படிப்பை படித்து முடித்தால் கணிசமான சம்பளத்துடன் வேலை கிடைப்பது உறுதி. அதனால் இந்த நிறுவனத்தில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு 4 லட்சத்து 68 ஆயிரத்து 240 பேர் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு எழுதினார்கள். இதில், 13 ஆயிரத்து 602 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று ஐ.ஐ.டி.யில் சேர்ந்தார்கள். கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் இருந்து கடந்த ஆண்டு 62 ஆயிரத்து 884 மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதினார்கள். இதில், 2,195 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றார்கள்.
இந்த நிலையில், இந்தியா முழுவதும் உள்ள 15 ஐ.ஐ.டி.களில் மாணவர்கள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு 1067 மையங்களில் நேற்று நடைபெற்றது. காலை மற்றும் மதியம் என 2 பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 6 மையங்களில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து 8 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் இந்த தேர்வை எழுதினார்கள்.
இந்த தேர்வு மூலம் பி.டெக் இளங்கலை படிப்புக்கான 9,618 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 18-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.