மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க இடைக்காலத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் மக்கள் நலப்பணியாளர்கள் கடந்த நவம்பர் மாதம் 8ந் தேதி பணிநீக்கம் செய்யப்பட்டனர். தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இந்த வேலை நீக்க உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், திண்டுக்கல் மாவட்ட மக்கள் நலப்பணியாளர்கள் நலச்சங்கம் ஆகியவை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுகுணா, மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்த அரசு உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள நலப்பணியாளர்களை உடனடியாக வேலையில் சேர்க்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டார். ஆனால் இன்று வரை அவர்கள் பணியில் அமர்த்தப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் முன்னேற்ற சங்கம் சென்னை ஐகோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது. மக்கள் நலப்பணியாளர்களை பணியில் சேர்க்க வேண்டும் என்று ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தால், தங்கள் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மக்கள் நலப்பணியாளர்களால் தொடரப்பட்ட இந்த மனு மீதான விசாரணையில் அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகாததால் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் அரசு தரப்பில், மக்கள் நலப்பணியாளர்கள் எந்த ஒரு இடஒதுக்க்கிடும் செய்யப்படாமல் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தேர்வாணையம் மூலமும் நியமிக்கப்படவில்லை என்று பதில் மனு தாக்கல் செய்தது. ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி சுகுணா, மக்கள் நலப்பணியாளர்களுக்கு இதுவரை பணி வழங்கப்படாதது குறித்து 4 வாரங்களுக்குள் அரசு விளக்கமளிக்க வேண்டும் என கூறி, அரசின் மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில் இன்று நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபாலன் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கவேண்டும் என்ற தனிநீதிபதி சுகுணாவின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் இந்த வழக்கினை வரும் ஏப்.18 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மேலும் இதுகுறித்து மக்கள் நலப் பணியாளர்களின் 2 சங்கங்களும் ஏப்.18 அன்று நேரில் விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டனர்.