எஸ்எஸ்எல்சி தேர்வு :வேலூர், தி.மலை மாவட்டத்தில்
94 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நாளை தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை 303 மையங்களில் சுமார் 94 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் முதல் முறையாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வுகள் நாளை தொடங்கி வரும் 23ம் தேதி வரை நடைபெறுகிறது.
வேலூர் கல்வி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 302 மாணவர்கள், 14 ஆயிரத்து 235 மாணவிகள் என மொத்தம் 28 ஆயிரத்து 549 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதில் அரக்கோணம் வட்டத்தில் சயனபுரம், நெமிலி பெண்கள், வளர்புரம் மற்றும் சேந்தமங்களம் என 4 மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 15 ஆயிரத்து 92 மாணவர்களும், 14 ஆயிரத்து 259 மாணவிகள் என மொத்தம் 29 ஆயிரத்து 456 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
இதில், அழிஞ்சிக்குப்பம், பொம்மிகுப்பம் மற்றும் புதூர்நாடு மலை கிராமத்தில் உள்ள நெல்லிவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 179 மையங்களில் 57 ஆயிரத்து 878 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமார் தலைமையில் 358 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 407 மாணவர்கள், 17 ஆயிரத்து 500 மாணவிகள் என மொத்தம் 35 ஆயிரத்து 907 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுக்காக 124 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதன்மை கல்வி அலுவலர் நுர்ஜகான், மாவட்ட கல்வி அலுவலர்கள் பத்ரு, சண்முகம் ஆகியோர் தலைமையில் 150 பேரைக் கொண்ட 34 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 105 மாணவர்கள், 10 ஆயிரத்து 488 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 593 பேர் எழுதுகின்றனர். செய்யாறு கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 302 மாணவர்கள், 7 ஆயிரத்து 12 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 314 பேர் எழுதுகின்றனர்.
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சுமார் 94 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். சமச்சீர் பாடத் திட்டத்தின்படி அறிவியல் தேர்வுக்கு இந்த ஆண்டு 25 மதிப்பெண்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டது. இதனால், 75 மதிப்பெண்களுக்கு மட்டும் அறிவியல் தேர்வு நடைபெறும்.
வேலூர் மத்திய சிறையில் இருந்து இந்த ஆண்டு 10 ஆயுள் தண்டனை கைதிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கு சென்னை புழல் சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் 10 கைதிகளும் சென்னை புழல் சிறைக்கு தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.