கலெக்டர் ஆபீசில் காணாமல் போன கர்ப்பிணி பெண் மீட்பு
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் சுலைமான். இவரது மனைவி ஆயிஷா(35). இவர் கடந்த 22-ந் தேதி மாலை 3 மணியளவில் தனது கணவர் சுலைமானுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். சுலைமான் போர்ட்டிகோவில் நின்று கொண்டார்.
ஆயிஷா மட்டும் மேலே சென்றார். மேலே சென்ற ஆயிஷா 4-30 மணியாகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்து சுலைமான், ஆயிஷாவின் செல்போனை தொடர்பு கொண்டபோது “சுவீட்ச் ஆப்” செய்யப்பட்டு இருந்தது.
இதனால், அதிர்ச்சி அடைந்த சுலைமான் மேலே சென்று ஆயிஷா பற்றி அங்கு இருந்தவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் பார்க்கவில்லை என்று தெரிவித்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
ஆனாலும், அவர் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள பகுதியிலேயே இரவு வரை தேடிக்கொண்டு இருந்தார்.
ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வரும் போலீசார் சுலைமானின் பதட்டத்தை புரிந்து கொண்டு அவரை அழைத்து விசாரித்தனர்.
சுலைமான் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியை காணவில்லை என்று கூறியதை அடுத்து சேலம் மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
விடிய, விடிய ரோந்து சென்ற போலீசார் ஆயிஷாவை தேடினர். தொடர்ந்து அவரை பற்றியே மைக்கில் தகவல் கேட்டுக்கொண்டே இருந்தனர்.
இந்நிலையில் மறுநாள் காலையில் சுலைமான் ஆயிஷா காணவில்லை என்று சேலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆயிஷாவை தேடிவந்தனர். அப்போது அவரை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியானது. அவர் ஏற்கனவே ஒரு தொண்டு நிறுவனத்தில் மோசடி செய்தார் என்றும் எனவே அவர் தற்போதும் தானாகவே மறைந்து கொண்டு கடத்தல் நாடகம் ஆடி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஆயிஷாவின் தோழிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆயிஷா மாயமானது தொடர்பாக போலீசாருக்கு பல்வேறு குழப்பம் இருந்தது. இதையடுத்து அவரது உறவினர்களை அழைத்து அவர் உங்களை தொடர்பு கொண்டால் எங்களிடம் தகவல் சொல்லுங்கள் என்றனர். அவர்களும் சரி என்றனர்.
இந்நிலையில், ஆயிஷா உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தாயை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அப்போது அவரது தாய் இங்கு நடக்கும் பிரச்சினைகள் குறித்து கூறி நீ உடனே இங்கே வா, என்று கூறியிருக்கிறார். அதற்கு ஆயிஷா நான் எங்கு இருக்கிறேன் என்றே தெரியவில்லை என்று கூறினார்.
இதையடுத்து ஆயிஷாவின் தாய் டவுன் போலீசில் தனது மகள் தொலைபேசியில் பேசியது குறித்து தகவல் கொடுத்தார்.
தொலை பேசியை பேசிய நபரின் விபரங்களை பெற்ற சேலம் நகர காவல்நிலைய ஆய்வாளர் சூரிய மூர்த்தி மற்றும் போலீசார் ஆயிஷா பீகார் மாநிலத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
மேலும், போலீசார் ஆயிஷாவின் உறவினர்களை அழைத்துக் கொண்டு பீகார் சென்று ஆயிஷாவை அழைத்துக் கொண்டு சேலம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு இன்று கொண்டு வந்தனர்.
போலீசார் ஆயிஷாவிடம் விசாரணை நடத்திய போது அவர் கர்ப்பம் இல்லை என்று தெரியவந்தது. அவர் கர்ப்பிணி என்று அவரது கணவர் சுலைமான் நாடகமாடியது தெரியவந்தது.
மேலும் கணவன்-மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தான் ஆட்டோ பிடித்து ரெயில் நிலையத்திற்கு சென்று ரெயிலில் சென்று விட்டதாக ஆயிஷா கூறியிருக்கிறார். இதையெல்லாம் எதற்காக இவர்கள் செய்தார்கள்? என்ன பிரச்சினை என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் விசாரணையில், ஆயிஷா கூட்டுறவு வங்கியில் பணியில் இருப்பதாகவும், நிறை மாத கற்பிணியாக இருப்பதால், பேறுகால விடுப்பு கடிதம் கொடுக்கவே தன்னுடைய மனைவியை அழைத்துகொண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததாக சுலைமான் கூறியிருந்தார். ஆனால், இப்போது ஆயிஷா கூட்டுறவு வங்கியில் வேளையில் இல்லை என்றும், அவர் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார் எதற்காக இப்படி நடந்து கொண்டார்கள் என்று போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள்.
இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.