சச்சின் சாதனையை முறியடிக்க முடியாது: கில்கிறிஸ்ட்
இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர், அண்மையில் ஆசிய கிரிக்கெட்டில் தனது 100 வது சர்வதேச சதத்தை (டெஸ்டில் 51 சதம், ஒரு நாள் போட்டியில் 49 சதம்) எடுத்து உலக சாதனை படைத்தார். செஞ்சுரியில் செஞ்சுரி கண்ட முதல் வீரர் இவர் தான்.
தெண்டுல்கரின் சாதனையை யாராலும் நெருங்க முடியாது என்று ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனுமான ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மொகாலியில் அவர் கூறியுள்ளதாவது,
சதங்களில் தெண்டுல்கருக்கும், மற்றவர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமே அவர் தலைச்சிறந்த வீரர் என்பதை பறைசாற்றும். அவர் தொடர்ந்து தனது வழியில் அசத்திக் கொண்டிருக்கிறார். அவரது உலக சாதனையை யாராலும் முறியடிக்க முடியுமா? என்பது உண்மையிலேயே சந்தேகம் தான். அவரது சாதனையை பார்த்தால், அவருக்கு அடுத்து உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ரிக்கிபாண்டிங் தான். ஆனால் அவர் ஒட்டுமொத்தமாக இதுவரை 71 சதங்களே (டெஸ்டில் 41 சதம், ஒரு நாள் போட்டியில் 30 சதம்) எடுத்துள்ளார். இருவருக்கும் இடையே 29 சதங்கள் இடைவெளி உள்ளது.
ஜிம்பாப்வே, வங்காளதேசம் போன்ற சிறிய அணிகளுக்கு எதிராக தெண்டுல்கர் நிறைய போட்டிகளில் விளையாடி சதம் அடித்திருக்கிறார் என்று ஒரு தரப்பினர் விமர்சிக்கிறார்கள். இந்த வகையில் வேண்டுமானால் 10 சதங்களை குறைக்கலாம். அப்படி பார்த்தாலும் அவருக்கும், பாண்டிங்குக்கும் இடையே 19 சதங்கள் வித்தியாசம் உள்ளது.
தெண்டுல்கரின் சாதனை ஈடு இணையற்றது, வியக்கத்தக்கது. கடந்த 22 ஆண்டுகளாக ஒரே மாதிரியான தீவிர முனைப்புடனும், உத்வேகத்துடன் விளையாடி வருகிறார். இதுவே அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதை காட்டும்.
ராகுல் டிராவிட் ஓய்வு பெற்று விட்டார். தற்போது சீனியர் வீரர்கள் என்ற வகையில் வி.வி.எஸ்.லட்சுமணும், தெண்டுல்கர் மட்டும் விளையாடி கொண்டிருக்கிறார்கள். இதில் தெண்டுல்கர் ஓய்வு பெறும் போது அணியில் மிகப்பெரிய வெற்றிடம் விழும். நாங்களும் இதே போன்ற நிலைமையை சந்தித்தோம். எனவே அது போன்ற சமயத்தில் இந்திய ரசிகர்கள் சற்று பொறுமையாகத் தான் இருந்தாக வேண்டும் என்றார்.