சங்கரன்கோவில் : இன்று ஓட்டுப்பதிவு
சங்கரன்கோவில் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் (தனி) சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு, அமைச்சரான சொ.கருப்பசாமி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் எஸ்.முத்துச்செல்வி, தி.மு.க. சார்பில் ஜவகர் சூரியகுமார், ம.தி.மு.க. சார்பில் டாக்டர் சதன் திருமலைக்குமார், தே.மு.தி.க. சார்பில் முத்துக்குமார், பாரதீய ஜனதா சார்பில் முருகன் மற்றும் 8 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
மொத்தம் 13 பேர் களத்தில் இருந்தாலும் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடையே மட்டுமே 4 முனை போட்டி நிலவுகிறது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, தமிழக அமைச்சர்கள், தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.
இது தவிர கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் சங்கரன்கோவில் தொகுதியில் முகாமிட்டு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓட்டு சேகரித்தனர். இதனால் கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த அனல் பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, வெளிïர்களில் இருந்து பிரசாரத்துக்கு வந்தவர்கள் நேற்று முன்தினமே தொகுதியை விட்டு வெளியேறினர்.
சங்கரன்கோவில் தொகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை இடைவிடாது ஓட்டுப்பதிவு நடைபெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,05,870. இதில் ஆண் வாக்காளர்கள் 1,02,815. பெண் வாக்காளர்கள் 1,03,055. இவர்கள் ஓட்டுப் போடுவதற்காக 242 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக கருதப்படுகிறது. தேர்தலையொட்டி சங்கரன்கோவில் தொகுதியில் இன்று தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.
ஓட்டுப்பதிவு நடைபெறுவதை ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வெப் கேமரா மூலம் படம் பிடிக்கிறார்கள். உயர் அதிகாரிகள் வாக்குப்பதிவு நிலவரங்களை உடனுக்குடன் நேரடியாக அறியும் வகையில் இணையதள வசதியுடன் லேப்டாப் கம்ப்ïட்டர் வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டு உள்ளன.
அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள் வாக்குச்சாவடிகளுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வாக்குப்பதிவை கண்காணிக்க மேலிட தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் நுண் தேர்தல் பார்வையாளர்கள் 25 பேர் வந்துள்ளனர்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மத்திய பாதுகாப்பு படை போலீசாருடன், வெளி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மொத்தம் 3 ஆயிரத்து 500 போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், புளியங்குடி வீராச்சாமி செட்டியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.
ஓட்டு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்படும் லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் என்ஜினீயரிங் கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளன. கம்ப்ïட்டர்களை பயன்படுத்த 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அங்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
வருகிற 21-ந் தேதி (புதன்கிழமை) ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. அன்று பகல் 12 மணிக்குள் முடிவு தெரிந்துவிடும்.