உ.பி. முதல்வர் யார்? மார்ச் 10ல் முடிவு
உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. உ.பி.யில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி 226 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ள மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது.
இதனால் மாயாவதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் கவர்னர் ஜோஷியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதைத் தொடர்ந்து வரும் 10 ம் தேதி சமாஜ்வாடி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
அக்கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பதை சமாஜ்வாடி எம்.எல்.ஏக்கள் முடிவு செய்ய உள்ளனர். 4 வது முறையாக முலாயம்சிங் மீண்டும் முதல்வர் ஆவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர், முலாயமின் மகனான அகிலேஷ் யாதவ் முதல்வராக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் முலாயம்சிங்தான் அடுத்த முதல்வர் என 38 வயதான அகிலேஷ் கூறியுள்ளார். இளம் தலைவரான அகிலேஷ் முதல்வரானால் உ.பி. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணும் என சில சமாஜ்வாடி தலைவர்களும், மக்களும் எதிர்பார்க்கின்றனர். இத்தகைய எண்ணங்களால் சனிக்கிழமை நடைபெற உள்ள எம்.எல்.ஏக்கள் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.