சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். வியாழன் (01.03.2012) அன்று காலையில் முதலாவதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர், டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டில் சொத்து குவிப்பு வழக்கு வருவதால், இன்றுடன் விசாரணையை முடித்துக்கொள்ள வேண்டும், மறு விசாரணையை 7 மற்றும் 8ம் தேதிகளில் நடத்த வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை உடனடியாக நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனால் சசிகலா தரப்புக்கு முகம் வாட்டமானது.
பின்னர் கேள்விகள் ஆரம்பரமானது. சென்னை. 36, போயஸ் கார்டன் கட்டடத்தின் மொத்த மதிப்பு, 7 கோடியே 24 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் என மதிப்பீடு கொடுக்கப்பட்டது தெரியுமா?
தெரியாது.
சிறுதாவூர் பங்களா மதிப்பீடு, 5 கோடியே 40 லட்சம் ரூபாய் என்பது தெரியுமா?
பையனூர் பங்களா மதிப்பீடு, ஒன்றே கால் கோடி ரூபாய் என்பது தெரியுமா?
ஐதராபாத் திராட்சைத் தோட்டத்தின் மதிப்பு, 6 கோடியே 40 லட்சம் ரூபாய் என்று தெரியுமா?
சென்னையில் பல இடங்களில் உள்ள வீடுகள், கடைகளின் வாடகை ஒப்பந்தங்கள் என பல கேள்விகள் கேட்கப்பட்டது.
இதற்கு சசிகலா, சில கேள்விகளுக்கு மதிப்பீடு அதிகம் போட்டுள்ளதாகவும், சில கேள்விகளுக்கு மதிப்பீடு செய்யும் அதிகாரிகள் தன்னிடம் எதுவும் கேட்கவில்லை என்றும், சில கேள்விகளுக்கு, விசாரணை அதிகாரிகள் சாட்சிகளை பொய் சொல்ல வைத்துள்ளனர் என்றும், சில கேள்விகளுக்கு தெரியாது என்றும் பதிலளித்தார்.
கேள்விகளுக்கு சசிகலா நீளமான பதில் அளித்ததால், சுருக்கமாக பதில் அளிக்குமாறு சற்று கோபடத்துடன் கூறினார் நீதிபதி.
இதற்கிடையில் வழக்கு விசாரணையின் இடையே தனது கண்ணில் மருந்து இட அனுமதிக்குமாறு நீதிபதியிடம் சசிகலா கோரிக்கை விடுத்தார். இதனால் விசாரணைக்கு சிறிதுநேரம் இடைவெளிவிட்டு அவருக்கு நீதிபதி அனுமதி அளித்தார்.
இதையடுத்து அந்த அறையிலேயே இளவரசி, சசிகலா கண்ணில் மருந்து போட்டார். அதன்பின்னர் சிறிதுநேரத்துக்குப் பிறகு விசாரணை மீண்டும் தொடர்ந்தது.
முன்னதாக சசிகலா கோர்ட்டுக்கு கூலிங் கிளாஸ் அணிந்து வந்தார். இதனை அனைவரும் ஆர்வமுடன் பார்த்தனர். பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க போட்டி போட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சசிகலா, அவரது உதவியாளர்கள் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை கடுமையாக எச்சரித்தனர்.