விடுதி வார்டன் கண்டிப்பு: செல்போனில் மிரட்டிய மாணவிகள்: நள்ளிரவில் மீட்ட போலீசார்
தஞ்சை மாவட்டம் திருவையாறு விசாலாட்சி நகரை சேர்ந்த மாணவியும் திருப்பூரை சேர்ந்த மாணவியும் தஞ்சை பழைய அரசு குடியிருப்பு அருகே உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இருவரும் மாதாகோட்டையில் உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளனர். கடந்த 28ஆம் தேதி காலை 11 மணி வரை இவர்கள் வகுப்புக்கு வரவில்லை. பள்ளி ஆசிரியர்கள், விடுதியில் விசாரித்தபோது, இருவரும் பள்ளிக்கு புறப்பட்டு சென்றதாக கூறினர்.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் தஞ்சை எஸ்.பி. அனில்குமார் கிரியிடம் புகார் செய்தார். எஸ்பி உத்தரவின்பேரில் தஞ்சை அனைத்து மகளிர் போலீசார், மாணவிகளை தேடினர்.
இதற்கிடையே, மாணவிகளில் ஒருவர், தனது மாமா மகனின் செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினார். அதில் ‘திருச்சிக்கு சென்று தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம்’ என கூறியிருந்தார். இந்த தகவல் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இரவு 9 மணியளவில் மாணவிகள் இருவரும் திருவானைக்காவல் பகுதியில் தனியாக சுற்றி திரிவதை கண்ட புறக்காவல் நிலைய போலீசார், அவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் விடுதியில் இருந்து வந்தவர்கள் என தெரிந்தது.
தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வந்து மாணவிகளை மீட்டனர். இருவரையும் தஞ்சை அழைத்து வந்து விசாரித்தனர். ‘விடுதி வார்டன் தங்களை கண்டித்ததுடன் பெற்றோரை அழைத்து வரும்படி கூறினர். இதனால் பயந்துபோய் திருச்சி சென்றோம்’ என மாணவிகள் தெரிவித்தனர். இருவரையும் அவர்களின் உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.