வரதட்சணையால் நின்றுபோன திருமணம்: மணமகன் தலைமறைவு
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தை சேர்ந்த கோவிந்தன்-தமிழ்செல்வி தம்பதிகளின் மகள் மகாலெட்சுமி(21). இவருக்கும் திருச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த வீராசாமி-பவீனா தம்பதிகளின் மகன் ராஜேஷ்(29)க்கும் திருமணம் நிச்சயிக்க முடிவுசெய்யப்பட்டு இன்று(20.06.12), திருச்சியில் உள்ள அண்ணாநகர் காலனி விநாயகர் கோயிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
முன்னதாக நேற்று பெண் அழைப்பு இருந்தது. ஆனால் மாப்பிள்ளை வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. இதுப்பற்றி விசாரித்தபோது பெண்வீட்டார், மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக 4பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் தருவதாக சொல்லி இருந்தனர். ஆனால் சொன்னபடி அவர்கள் கொடுக்கவில்லை. தற்போது கொஞ்சம் பணம் மற்றும் நகை தருவதாகவும், திருமணத்திற்கு பிறகு மீதியை கொடுப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் மாப்பிள்ளை வீட்டு தரப்பிலோ முழு வரதட்சணையையும் கேட்டுள்ளனர். பெண்வீட்டார் கொடுக்காததால் இன்று நடைபெறுவதாக இருந்த திருமணம் ரத்தாகிவிட்டது.
இதனையடுத்து பெண்வீட்டார் பெரம்பலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து மணமகனின் அப்பா-அம்மா வீராசாமி-பவீனாவை வரதட்சணை புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஆனால் மணமகன் ராஜேஷ் மட்டும் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.