இஸ்லாமியர்களுக்கு ஞானதேசிகன் ரம்ஜான் வாழ்த்து
புனித ரம்ஜான் கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன், ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,
”புனித இஸ்லாம் வலியுறுத்திய நோன்புப் பெருநாட்களைத் தொடர்ந்து இன்று ஈகைத் திருநாளாக இஸ்லாமியப் பெருமக்களால் போற்றி வணங்கப்படும் ரம்ஜான் பண்டிகை நாடெங்கும் உவகையோடு கொண்டாடப்படுகிறது.
அண்ணல் நபிகள் நாயகம் அருளிய அறநெறிக்கேற்ப ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான முப்பது நாட்கள் நோன்பிருந்து வசதி படைத்தோரும் பசியின் கொடுமையை உணர்ந்து ஏழை எளியோருக்கு உதவிடும் 'ஸஹாத்" என்னும் கடமையை நிறைவேற்றும் உன்னத விழா ரம்ஜான்.
இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்கு முதல் பிரதமர் நேரு காலம் தொடங்கி இந்திரா, ராஜீவ், ஆகிய பிரதமர்களின் காலத்திலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து அவர்களது வழிநின்று இன்றைக்கு சோனியா வழிகாட்டுதலில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு அம்மக்களுக்கென்று தனி அமைச்சகம், தனி அமைச்சரை உருவாக்கியுள்ளது. மேலும் அவர்களது சமூகப் பொருளாதார நிலையைக் கண்டறிய நீதியரசர் மிஸ்ரா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அக்கமிஷன் பரிந்துரையை ஏற்று சிறுபான்மை மக்களின் வாழ்வு உயர்வுக்கு 15 அம்சத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அவர்களது நலனுக்கென்று 165 பணிகளுக்கு மொத்தம் பல்லாயிரம் கோடி செலவிடப்படுகிறது.
இந்நன்னாளில் இறைவனின் இறுதித் தூதர்அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் உலகுக்கு போதித்த மனிதநேயம், நல்லொழுக்கம், அன்பு, அமைதி, சமாதானம், சகோதரத்துவம் ஆகிய உயரிய நெறிகளை ஏற்று வாழ்ந்து, நாட்டில் மத, இனப் பிரிவுகளிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு மிளிர்ந்து, வன்முறைகள் ஒழிந்து நல்லிணக்கம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம், உயர்வோம் என்றுகூறி அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், என் சார்பிலும் மனமுவந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- இவ்வாறு ஞானதேசிகன் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.