மறியல்; தீக்குளிப்பு; போலீஸ் குவிப்பு - சிவகாசி பதட்டம் ( படங்கள் )
விருதுநகர் மாவட்டம் சிவகாசி- திருத்தங்கல் ரோட்டில் சிறுகுளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் கரையை ஆக்கிரமித்து 100-க்கும் மேற்பட்ட கடைகள், 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இந்த பகுதிக்கு பெரியார் நகர், திருநகர் எனவும் பெயரிடப்பட்டது. கடந்த 35 ஆண்டுகளாக இப்பகுதியில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் மதுரை, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாலகிருஷ்ணன், நஜ்மல் ஹோடா மற்றும் நகராட்சி அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோர் 200-க்கும் மேற்பட்ட போலீசாருடன் ஆக்கிரமிப்புகளை அகற்று வதற்காக பெரியார் நகர் பகுதிக்கு சென்றனர்.
அப்போது அப்பகுதியில் குடியிருந்து வரும் பொது மக்களுக்கும், அதிகாரி களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி தொடர்ந்து நடந்தது. அந்த சமயத்தில் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கணேசன் (வயது40) என்பவர் தனது மாடி வீட்டின் மீது ஏறி நின்று கொண்டு, எனது வீட்டை இடிக்கக்கூடாது என்று கோஷம் போட்டார். திடீரென அந்த வாலிபர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி, ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீ வைத்துக்கொண்டார்.
இதை பார்த்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று தீயில் கருகிய கணேசனை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். கணேசன் இறந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஆத்திர மடைந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். அப்போது சிலர் போலீசார் மீது கற்களை வீசினர்.
உடனே போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர். இதில் பொது மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கூடுதல் போலீசார் வர வழைக்கப்பட்டு மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும், ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாலும் தற்காலிகமாக ஆக்கிரமிப்பு பணிகளை நிறுத்த கலெக்டர் ஹரிகரன் உத்தரவிட்டார். இதையடுத்து பெரியார் நகர், திருநகர் பகுதிகளில் நடைபெற்று வந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே இன்று காலை மேலும் ஒரு குடும்பத்தை சேர்ந்த கணவன்- மனைவி இருவரும் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக் குளிக்க முயன்றனர். இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
படங்கள் : ராமகிருஷ்ணன்